2024-25ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நேற்று (பிப்ரவரி 19) சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், “சூப்பரப்பு.. படிக்க 300 கோடி, நடிக்க 500 கோடி” என்ற கேப்ஷனுடன் பள்ளிகளுக்கு 360 கோடி என்றும் திரைப்பட துறைக்கு 500 கோடி என்றும் இரு வேறு ஊடகங்களின் நியூஸ் கார்டுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் மூலம் கல்வியை விட சினிமா துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்று பரப்பப்படுகிறது.
Fact-check:
வைரலாகும் தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய 2024-25ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று(பிப்ரவரி 19) வெளியிட்டுள்ள செய்தியின்படி, “பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமே ரூ. 44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,212 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, தனியே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கி விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி உயர்கல்வி படிக்க விரும்பும் திருநங்கைகளின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சினிமாத்துறைக்கு கல்வித்துறையை விட அதிகமாக நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்று தேடுகையில், “பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ. 500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இந்து தமிழ் திசை நேற்று (பிப்ரவரி 19) வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது. இதைத்தவிர வேறு எந்த நிதியும் சினிமா துறைககென்று ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்கள் சரியாக உள்ளனவா என்று தமிழ்நாடு அரசு நிதித்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை கொண்டு சரி செய்து பார்த்ததில் அவை சரியாக இருப்பது தெரிய வந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சினிமா துறையை விட கல்விக்கு குறைவான நிதி ஒதுக்கியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் கல்வித்துறைக்கு(பள்ளி மற்றும் உயர்கல்வி) மொத்தமாக ரூ. 52,254 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்திற்காக ரூ. 370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை மட்டும் சுட்டிக்காட்டி அது மட்டுமே கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி என்பதும் போன்று தவறாக பரப்ப வருகின்றனர்.