“வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் ஔவையாருக்கும் நெற்றியில் இருந்து திருநீறை அழித்துவிட்டு நடுநிலையாக்கி, குழந்தைகளுக்கு மத அடையாளம் போட்டு விஷம் விதைக்கும் திராவிட மாடல்.” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வலதுசாரியினரால் பகிரப்பட்டு வருகிறது. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து சுற்றி நின்று விளையாடுவது போல் உள்ள புகைப்படத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களை மட்டும் வட்டமிட்டு காட்டி தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு வலதுசாரியினர் இத்தகவலை பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு முதல் பருவ தமிழ் பாடப்புத்தகத்தின் PDF வடிவிலான புத்தகத்தை ஆய்வு செய்தோம். அதில், வைரலாகும் புகைப்படம் மூன்றாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கான புத்தகத்தில் பக்க எண் VII இல் இடம்பெற்றுள்ளது. மேலும், அப்புத்தகம் 2019ஆம் ஆண்டில் தான் முதல் பதிப்பு அச்சடிக்கப்பட்டது என்று அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் 2020, 2022ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட திருத்திய பதிப்பிலும் குழந்தைகள் இடம்பெற்றுள்ள இப்புகைப்படம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
இப்புகைப்படத்தில் மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் கிறிஸ்தவ மானவர் சிலுவை டாலர் அணிந்துள்ளதையும் இந்து மாணவர் நெற்றியில் திலகம் வைத்துள்ளதையும் இஸ்லாமிய மாணவர் தலையில் தொப்பி அணிந்திருப்பதையும் நம்மால் காண முடிகிறது. இவர்கள் அனைவரும் கை கோர்த்து நின்று மத நல்லிணக்கத்தை அடையாளப்படுத்துகின்றனர்.
மூன்று மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்
Conclusion:
நம் தேடலின் முடிவாக அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தில் கிறித்தவ, இஸ்லாமிய அடையாளங்களை உடைய மாணவர்களை மட்டும் குறிப்பிட்டு காட்டி மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வலதுசாரியினர் தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.