நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது. இந்நிலையில், “மாநாட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வரக்கூடாது என்று விஜய் சொன்னது தொண்டர்களுக்கு மட்டும்தான் போல,,, அடேய் பாண்டிச்சேரி புஸ்ஸி..!!!” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மது அருந்திவிட்டு வந்தததாகக் கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியை வெளியிட்டுள்ள News Tamil 24x7 ஊடகத்தின் உண்மையான காணொலியை யூடியூபில் கீவர்ட் சர்ச் உதவியுடன் தேடி ஆய்வு செய்தோம்.
அப்போது கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வைரலாகும் காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “27ஆம் தேதி தளபதி அவர்கள் (மாநாடு) அறிவித்துள்ளார்கள். அதன்படி இன்று கால்கோள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று உள்ளது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மொத்தமாகவே 10 வினாடிகளுக்கு தான் புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
மேலும், அவர் அதில் தெளிவாகவே பேசுகிறார். வைரலாகும் காணொலி சுமார் 30 வினாடிகள் ஓடுகிறது. கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு உண்மையான காணொலியின் வேகத்தை குறைத்து புஸ்ஸி ஆனந்த் மது அருந்திவிட்டு பேசுவது போன்று எடிட் செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மது அருந்திவிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.