Fact Check: தமிழ்நாட்டில் இரண்டு சிறுமிகள் தாக்கப்பட்டதாக பரவும் செய்தியின் உண்மை என்ன?

தமிழ்நாட்டில் இரண்டு சிறுமிகளை ஒருவர் கொடூரமாக தாக்கும் நிகழ்வு நடைபெற்றது என்று சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 29 March 2025 3:15 PM IST

Fact Check: தமிழ்நாட்டில் இரண்டு சிறுமிகள் தாக்கப்பட்டதாக பரவும் செய்தியின் உண்மை என்ன?
Claim:தமிழ் நாட்டில் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளை கொரூரமாக தாக்கியுள்ளார்
Fact:பரவும் தகவல் தவறு. இந்த சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்றது


“இவன் யார் எந்த ஊருன்னு தெரியல தமிழ்நாட்டை சேர்ந்த இவன கைது செய்து முட்டிக்கு முட்டி தட்ர வரைக்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் ஃபிரண்ட்ஸ்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், பள்ளி சீருடை அணிந்துள்ள இரண்டு சிறுமிகளை ஆண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.


Fact-check:

நியூஸ்மீட்ட நடத்திய ஆய்வில் இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, _shiblee என்று எக்ஸ் பயனர் 2024ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், “கஞ்சி பிரசாத் என்பவர் தனது இரண்டு மகள்களையும் இரக்கமின்றி தாக்கியுள்ளார். இக் கொடூரம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி ABP Desam இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள பெண்டபாடு எஸ்சி காலனியைச் சேர்ந்தவர் கஞ்சி டேவிட் ராஜூ. இவரது மனைவி நிர்மலா குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். தன் மனைவி நிர்மலா மீது சந்தேகம் கொண்டு தனது இரண்டு மகள்களான அம்ருதா மற்றும் அலேக்யாவை கண்மூடித்தனமாக தாக்கினார்.

குவைத்தில் உள்ள தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் காணொலியை அவர் தனது மனைவிக்கு அனுப்பியதாக தெரிகிறது. இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இக்காணொலி வைரலானதையடுத்து, பெண்டபாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமறைவான டேவிட் ராஜுவை தேடி வருகின்றனர். நான்கு நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம், தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது என்று தெரிய வருகிறது.

மேலும், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி Times of India வெளியிட்டிருந்த செய்தியில், தனது இரு மகள்களை அடித்து துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ராஜு, குவைத்தில் இருந்து வந்த தனது மனைவி நிர்மலாவை மதுபோதையில் கொலை செய்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



முடிவாக, நம் தேடலில் இரண்டு சிறுமிகளை நபர் ஒருவர் தாக்கும் நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றதாக தவறாக பரப்பி வருகின்றனர். உண்மையில் இச்சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது எனவும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தற்போது உயிருடன் இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.




Claim Review:தமிழ் நாட்டில் இரண்டு பெண் குழந்தைகள் கொடூரமாக தாக்கப்பட்டதாக பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:X
Claim Fact Check:False
Fact:பரவும் தகவல் தவறு. இந்த சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்றது
Next Story