“உ.பி.யில் உள்ள இந்த அப்பாவி சிறுமி ஆற்றில் குளித்தது தவறு. நதியின் புனிதம் பாழாகிவிட்டது என்று கூறி, சிறுமியை இந்துத்துவா குண்டர்கள் சித்ரவதை செய்கின்றனர்…” என்ற தகவலுடன் அரைநிர்வாணத்தில் இருக்கும் பெண்ணை சிலர் பயங்கரமாகத் தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரீவ்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை First India ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், “வைரல் காணொலியில் மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தங்கள் தாய் மாமன் மகனுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறி அவர்களது குடும்பத்தினரால் தாக்கப்படுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “வழக்குப் பதிவு செய்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தார் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பாடிதார் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.
First Indiaவின் எக்ஸ் பதிவு
தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The Hindu செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பழங்குடியின சகோதரிகள் தங்கள் மாமாவின் மகன்களுடன் தொலைபேசியில் பேசகயதாகக் கூறி அவர்களது உறவினர்களால் குச்சிகளால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை India Today உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக உ.பி.யில் சிறுமி ஆற்றில் குளித்ததால் நதியின் புனிதம் பாழாகிவிட்டது என்று கூறி, அச்சிறுமியை இந்துத்துவா குண்டர்கள் தாக்கியதாக வைரலாகும் காணொலி உண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற குடும்பப் பிரச்சினை தொடர்பான காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.