தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் ரகசியமாக சந்தித்துக் கொண்டதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
“இது கள்ளக்கூட்டணியா கள்ளத்தனக்கூட்டணியா ரகசிய சந்திப்பு எதுக்கு? தமிழ்நாட்டை என்ன செய்ய இந்த கள்ள சந்திப்பு” என்று உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் புகைப்படம் 2022ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரின் தாயார் இறப்பின் போது இருவரும் சந்திக்கப்பட்டுக்கொண்ட போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இத்தகவல் உண்மைதானா என்பதை ஆய்வு செய்ய வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேசின் தாயார் புஷ்பா நேற்று (ஜூலை 14) காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
News 18 Tamilnadu வெளியிட்டுள்ள செய்தி
Asiannet Tamil வெளியிட்டுள்ள செய்தியில், “அஞ்சலி செலுத்திய பின், இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமலர் ஊடகமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளது.
Asiannet வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
முடிவாக, நம் தேடலில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை ஆகியோர் ரகசியமாக சந்தித்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் இது 2022ஆம் ஆண்டு துக்க நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.