உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். நீண்ட மீட்பு போராட்டத்திற்கு பிறகு சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த 41 தொழிலாளர்களும் கடந்த நவம்பர் 28ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், “17 நாட்களாக உத்தரகாண்டின் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். ஜெய் ஸ்ரீராம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பெரிய குழாயில் இருந்து ஸ்ட்ரெச்சர் உதவியுடன் சிலர் வெளியே வரும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, காணொலியில் உள்ள புகைப்படத்துடன் Deccan Chronicle ஊடகம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “இடிந்து விழுந்த உத்தர்காசியின் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க, செருகப்பட்ட குழாய் வழியாக சக்கர ஸ்ட்ரெச்சரின் செயல் விளக்கத்தை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) நவம்பர் 24ஆம் தேதி நடத்தியது” என்று கூறப்பட்டுள்ளது.
இதே செய்தியை Zee News Odia மற்றும் The Indian Express அதே தேதியில் வெளியிட்டுள்ளது. மேலும், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் கடந்த நவம்பர் 28ஆம் தான் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வைரலாகும் காணொலி நவம்பர் 24ஆம் தேதி எடுக்கப்பட்டது.
Conclusion:
முடிவாக, உத்தரகாண்டின் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவதாக வைரலாகும் காணொலி தவறானது. உண்மையில், அது தொழிலாளர்களை மீட்க செருகப்பட்ட குழாய் வழியாக சக்கர ஸ்ட்ரெச்சரின் செயல் விளக்கத்தை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காட்டும் காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.