“உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிசிடிவி காணொலி மற்றும் ஒருவரை காவலர்கள் அடித்து இழுத்து வரும் காணொலியும் எடிட் செய்யப்பட்டுள்ளது.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலியில் இருப்பது வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் என்றும் தெரியவந்தது.
சிசிடிவி காட்சி:
இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் சிசிடிவி காணொலியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Sakal என்ற மராத்தி யூடியூப் சேனலில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வைரலாகும் காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “பர்ப்பானி: கல்லூரியை விட்டு வெளியேறிய இளம்பெண்களிடம் சில்மிஷம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு தொடர்ந்து தேடுகையில், deshonnati என்ற ஊடகம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “மகாராஷ்டிராவின் பர்பானியில் உள்ள மகாத்மா பூலே கல்லூரிக்குப் பின்னால் உள்ள சாலையிலிருந்து சில கல்லூரிப் பெண்கள் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, பர்பானி நானல்பேத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளான முகமது அஸ்லம் மற்றும் முகமது சலிம் ஆகியோரை கைது செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Saam TV என்ற மராத்தி ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Deshonnati வெளியிட்டுள்ள செய்தி
நபரை அடித்துசெல்லும் காவலர்கள்:
அடுத்தபடியாக காவல்துறையினர் நபரை அடித்துச் செல்லும் காணொலியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Cityherald என்ற facebook பக்கத்தில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “மதுர் சௌராசியா என்ற தொழிலதிபரை கொலை செய்தவனை கதர்வாரா காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலை கொண்டு தொடர்ந்து தேடினோம். அப்போது, Navabharat மற்றும் Dainik Bhaskar ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, “மத்திய பிரதேசத்தின் நரசிங்பூரில் உள்ள கதர்வாராவைச் சேர்ந்த விகாஸ் குச்பாண்டியா, மதுர் சௌராசியாவை சவரக் கத்தியால் கழுத்தை அறுத்தும் தலையில் கல்லால் அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கொலைக் குற்றவாளி விகாஸ் குச்பாண்டியா காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுர் சௌராசியா குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து வாங்கிய ரூ. 40,000 பணத்தை திருப்பி தராததால் மதுர் சௌராசியாவை கொலை செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் உத்திரபிரதேசத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த அப்துல் என்பவனை உபி காவல்துறையினர் பொறிவைத்து பிடித்ததாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை உண்மையில் அது மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களின் காணொலிகள் தவறாக எடிட் செய்யப்பட்டு பகிரப்படுவதும் தெரியவந்தது.