Fact Check: விசிகவினர் பேக்கரியில் கேக் கேட்டு தகராறில் ஈடுபட்டனரா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

விசிக உறுப்பினர்கள் பேக்கரியில் கேக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By -  Ahamed Ali
Published on : 12 Sept 2025 8:30 PM IST

Fact Check: விசிகவினர் பேக்கரியில் கேக் கேட்டு தகராறில் ஈடுபட்டனரா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி
Claim:சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் காணொலியில், விசிக உறுப்பினர்கள் சிலர் பேக்கரி ஒன்றில் கேக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் காணொலியில் இருப்பது ஹரியானாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்

பேக்கரி ஒன்றில் இலவசமாக கேக் கேட்டு தகராறு செய்த விசிக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், இருவர் சேர்ந்து கடைக்காரரை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் ஹரியானாவில் நடைபெற்றது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி Times of India ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள புன்ஹானாவின் பஞ்சாப் காலனியில் அமைந்துள்ள நவீன் சோனி என்பவருக்கு சொந்தமான நகை கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் என்று தெரியவந்தது.


Times of India வெளியிட்டுள்ள செய்தி

மேலும், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி காலை 8:30 மணி அளவில் கடையை திறந்த சிறிது நேரத்தில், தலைக்கவசம் அணிந்திருந்த இருவர் நகைக் கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியை காட்டி நவீனை மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறிக்க முயன்றனர்.

அப்போது, கடைக்காரர் பதிலடி கொடுக்கவே சண்டையின் போது, கொள்ளையர்களில் ஒருவர் நவீனின் தலையில் துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கினார். கொள்ளையர்களில் ஒருவரை நவீன் பிடிக்கவே, மற்றொருவர் தப்பி ஓடினார். பிடிபட்டவர் உபி-யின் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த அகமது (21) என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இதுதொடர்பாக புன்ஹானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ETV Bharat, Dainik Bhaskar உள்ளிட்ட ஊடகங்களும் இதே செய்தியை வெளியிட்டுள்ளன.


ETV Bharat ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

நம் தேடலின் முடிவாக பேக்கரியில் இலவசமாக கேக் கேட்டு தகராறில் ஈடுபட்ட விசிக உறுப்பினர்கள் என்று வைரலாகும் காணொலி உண்மையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்புடைய என்று தெரியவந்தது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் காணொலியில் இருப்பது ஹரியானாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்
Next Story