Fact Check: ரோஹிங்கியா அகதி வங்கிக்கு தீ வைத்ததாக பரவும் காணொலி? உண்மை அறிக
ரோஹிங்கியா முஸ்லிம் இலவச நிதி உதவி வழங்கப்படாததால் ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் வங்கிக்கு தீ வைத்ததாக வைரலாகும் காணொலி
By - Ahamed Ali |
Claim:ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் வங்கிக் கிளையில் ரோஹிங்கியா முஸ்லீமான நூர் இஸ்லாம் தீ வைத்தபோது ஏற்பட்ட பரபரப்புக் காணொலி பரவி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் வங்கி ஏடிஎம் கார்டில் இருந்து பணம் வராததால் இவ்வாறு நடந்து கொண்டார்
“அதாவது மக்களே, இப்ப மதசார்பற்ற ஆஸ்திரேலியால என்ன ஆச்சுன்னு பார்த்தீங்கனா; ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. நூர் இஸ்லாம் என்ற அகதி காலை 10 மணிக்கு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள காமன்வெல்த் வங்கிக்கு வந்து இலவச நிதி உதவி வரிசையில் இணைகிறார். அங்கு அவரை மறுநாள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
உடனே நமது ரோஹிங்கியா அகதியின் ஜிஹாத் விழித்தெழுகிறது, அவர் காமன்வெல்த் வங்கிக்கு அருகிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்று பெட்ரோல் நிரப்பப்பட்ட கேனுடன் வங்கிக்கு திரும்புகிறார், வங்கியில் டஜன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும் அழகான உள்கட்டமைப்பு கொண்ட இந்த வங்கிக்கு நம்ம அன்பான ரோஹிங்கியா அகதி தீ வைத்த்துக் கொள்கிறார்.
₹300 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கியின் சொத்துக்கள் எரிந்து நாசமாகின. தீயில் 28 ஆஸ்திரேலியர்கள் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் மருத்துவமனைகளில் கிடக்கின்றனர். நூர் இஸ்லாம் பிடிபட்டார். ஆனால் அவர் தன்னை 'பைத்தியம்' என்று காட்டத் தொடங்கினார். ரோஹிங்கியா 'அகதி' தற்போது ஒரு மறுவாழ்வு மையத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், நபர் ஒருவர் எரிபொருளை ஊற்றி கட்டிடத்திற்கு தீ வைத்து கொளுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் பதிவு
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வங்கி ஏடிஎம் கார்டில் ஏற்பட்ட பிரச்சினையால் பணம் எடுக்க இயலாததால் இவ்வாறு செய்தார் என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2019ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி ABC ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, நவம்பர் 18, 2016ஆம் ஆண்டு மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள ஸ்பிரிங்வேல்ஸில் உள்ள காமன்வெல்த் வங்கியின் நுழைவு வாயிலில் மியான்மாரைச் சேர்ந்த 24 வயதான நூருல் இஸ்லாம் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.
SBS ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி
சம்பவத்தன்று, தனது வங்கி ஏடிஎம் கார்டில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாததால் அவர் விரக்தியடைந்தார். மூன்று வங்கி ஊழியர்கள் அவருக்கு உதவ முயன்ற போதிலும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை. பின்னர் நேரடியாக வங்கியில் பணம் எடுத்துக்கொடுத்தனர். இருப்பினும் அன்று காலை அவரது கணக்கிலிருந்து பணம் எடுக்க எவ்வளவு நேரம் ஆனது என்பது குறித்து நூருல் இஸ்லாம் விரக்தியடைந்ததால் இச்சம்பவம் நடைபெற்றதாக நீதிமன்றம் விசாரித்தது.
அச்சமயம் அவர் தனது கணக்கில் இருந்த 442 டாலர் பணம் மொத்தத்தையும் எடுத்துள்ளார். மேலும், இந்நிகழ்வு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே செய்தியை The Guardian மற்றும் SBS ஆகிய ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
முடிவாக, இலவச நிதி உதவி வழங்கப்படாததால் மியான்மாரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம் ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் வங்கிக்கு தீ வைத்ததாக வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் அவரது வங்கி ஏடிஎம் கார்டில் இருந்து பணம் வராததால் இவ்வாறு நடந்து கொண்டதாக நம் தேடலில் தெரியவந்தது.