Fact Check: மால்டா வன்முறையின் போது எடுக்கப்பட்டது என்று வைரலாகும் காணொலி? உண்மை என்ன
மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற வன்முறையின்போது எடுக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali
Claim:மால்டாவில் நடைபெற்ற வன்முறையின்போது எடுக்கப்பட்ட காணொலி
Fact:இத்தகவல் தவறானது. இக்காணொலி 2023ஆம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது
மேற்கு வங்கத்தின் மால்டாவில் கடந்த மார்ச் 27ஆம் தேதி கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்திய கும்பலை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். மால்டாவின் மொதபாரி பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு முன்னால் பட்டாசு வெடிப்பதற்கு எதிரான போராட்டத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ஹிந்து கடைகள் குறிவைத்து எறித்து வருகின்றனர்.... இது தான் அமைதி மார்க்கம் மா ??? நாளை எல்லோருக்கும் இதே நிலை தான் வரும்…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்கணொலி வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, Prothom Alo என்ற வங்கதேச ஊடகம் 2023ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டிருந்தது. அதில், வங்காளதேசத்தின் சில்ஹெட் என்ற பகுதியில் முற்றுகையை ஆதரித்து நடைபெற்ற பேரணியின் போது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Daily Sylhet Mirror என்ற ஊடகத்தில் அதே தேதியில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, சில்ஹெட்டின் சுபித்பஜார் பகுதியில், வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் கூட்டணிக் குழுக்களால் 48 மணி நேர முற்றுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நடைபெற்ற ஜோதி பேரணி வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர், ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஆம்புலன்ஸுகள் தீக்கிரையாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி Dhaka Tribune வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆளும் அவாமி லீக் அரசாங்கத்தை ராஜினாமா செய்து, அடுத்த பொதுத் தேர்தலை ஒரு கட்சி சார்பற்ற நிர்வாகத்தின் கீழ் நடத்துமாறு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆறு கட்டங்களாக முற்றுகைப் போராட்டங்களை நடத்தின என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 28ஆம் தேதி மேற்கு வங்க காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவின்படி வைரலாகும் காணொலி நவம்பர் 2023ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த நிகழ்வுகளைக் காட்டுகிறது. மேலும், மால்டாவில் நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மால்டாவில் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion
நம் தேடலின் முடிவாக மேற்கு வங்கத்தின் மால்டாவில் நடைபெற்ற வன்முறையின்போது எடுக்கப்பட்டது என்று வைரலாகும் காணொலி உண்மையில் வங்கதேசத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறையின் போது எடுக்கப்பட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.