“அப்துல் காலம் அவர்களின் இறுதி சடங்குகளில் கலந்துகொண்ட ஒரே தமிழக தலைவர் கேப்டன் “விஜயகாந்த்” மட்டுமே…” என்ற கேப்ஷனுடன் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கிற்கு தேமுதிக முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மட்டுமே பங்கேற்றார் என்றும் வேறு எந்த தலைவர்களும் பங்கேற்கவில்லை எனும் தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பரவி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர் என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தலைவர்கள் குறித்த தகவலை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The Hindu 2021ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அப்துல் கலாமின் இறுதி சடங்கு தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தமிழக ஆளுநர் ரோசய்யா, அண்டை மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் மற்றும் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். உடல்நிலை சரியில்லாத முதலமைச்சர் ஜெயலலிதா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் மாநில அரசின் சார்பாக மலர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள ஆளுநர் என்.சதாசிவம், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திராவின் என். சந்திரபாபு நாயுடு, கேரளாவின் உம்மன் சாண்டி, வி.எஸ். அச்சுதானந்தன், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், அரசியல் கட்சித் தலைவர்கள், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்கிரஸ்), ஜி.கே. வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ்), தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக), ஆர்.அன்புமணி (பா.ம.க), வைகோ (ம.தி.மு.க) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தியதாக புகைப்படத்துடன் வெவ்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கில் விஜயகாந்த் மட்டுமே பங்கேற்றதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவரது இறுதி சடங்கில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர்களும் பங்கேற்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது