மியான்மர் நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவான இந்த இந்நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், “மியான்மார் தற்போதைய நிலை” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், கட்டிட இடிபாடுகள் குறித்த காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்கணொலி காஸா போரின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜனவரி 24ஆம் தேதி Azim Official என்ற யூடியூப் சேனலில் “போர் நிறுத்தத்திற்கு முன்பாக பாலஸ்தீனத்தின் காஸா” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. முதற்கட்டமாக வைரலாகும் காணொலி மியான்மர் நிலநடுக்கத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியில் உள்ள dn_osama என்ற எழுத்தை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, OSAMA A RABEA என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அதில் அவர் தன்னை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை ஜபாலியா முகாம் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வைரலாகும் காணொலி காஸா போரின்போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக காஸா போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஜபாலியா முகாம் இடிந்த நிலையில் இருப்பதை ட்ரோன் காட்சிகள் காட்டுகிறது என்று Reuters ஊடகம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் “இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு படமெடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள், காஸாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட விரிவான அழிவை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் மியான்மர் நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்று வைரலாகும் காணொலி காஸா போரின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.