கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், “கள்ளக்குறிச்சி விவகாரம் - 8 பேர் தலைமறைவு! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு; பிரபு மீது 10'க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டதாக நேற்று(ஜூன் 20) தேதியிட்ட நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய நேற்றைய(ஜுன் 20) தேதியில் நியூஸ் 7 தமிழ் ஊடகம் இவ்வாறான செய்தியை வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடியதில் அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை என்பது தெரிய வந்தது. மாறாக, “இத்தகவலை நாங்கள் வெளியிடவில்லை அது போலி செய்தி” என்று நேற்று(ஜுன் 20) நியூஸ் 7 தமிழ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையில் அதிமுகவினர் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து தேடினோம். அப்போது, நக்கீரன் ஊடகம் இன்று (ஜுன் 21) இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இவ்விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மாதேஷிடம் இருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை அதனை கோவிந்த ராஜுக்கு விற்பனை செய்துள்ளார்.
அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசஃப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நியூஸ் 18 தமிழ்நாடு உள்ளிட்ட ஊடகமும் செய்தியாக வெளியிட்டுள்ளது. எந்த செய்தியிலும் கைதானவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற குறிப்புகள் இல்லை. மேலும், இக்கட்டுரை வெளியிடப்படும் வரை கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிமுக உறுப்பினர்களின் தொடர்பு குறித்து எந்த செய்தியும் வரவில்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக வைரலாகும் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலி என்றும் தற்போது வரை கைதானவர்களுக்கும் அதிமுகவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.