மிக்ஜாம் புயலினால் சென்னையில் நேற்று(டிசம்பர் 4) கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த படகு இன்னும் சில நொடிகளில் இரண்டாவது பிளாட் பாரத்திலிருந்து புறப்படும்” என்று கேப்ஷனுடன் நையாண்டியாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் இருக்கும் பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் ஒருவர் படகினை இயக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி kishorkdm00 என்ற எக்ஸ் பயனர், “மும்பையில் பருவமழை பெய்யும்போது வெனிஸ் செல்ல வேண்டிய அவசியமில்லை. #MumbaiRain” என்று நையாண்டியாக வைரலாகும் அதே புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதன் மூலம் முதற்கட்டமாக இது மும்பையில் நடைபெற்ற நிகழ்வு என்றும் பழையது என்றும் கூற முடிந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது, YourStory என்ற இணையதளத்தில் 2017ஆம் ஆண்டு மும்பையில் பெய்த மழை குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதிலும் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும், vyas_sumeet என்ற எக்ஸ் பயனரும், "இது மும்பை நலசோபரா ரயில்நிலையம்" என்று குறிப்பிட்டு இதே புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவில், சென்னை ரயில் நிலையத்தினுள் தேங்கி இருக்கும் தண்ணீரில் ஒருவர் படகினை இயக்குவது போன்று வைரலாகும் புகைப்படம் பழையது என்றும் அது மும்பையில் எடுக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது