"வாட்ஸ்அப்பில் இருக்கும் அத்துனை நண்பர்களுக்கும் பேட் நியூஸ்(மோசமான செய்தி), நேற்று பகலில் திடீரென்று 400 பேர் வெளிநாட்டில் இருந்து சேலத்தில் இறங்கி உள்ளனர். அவர்கள் 5 முதல் 10 வயதுடைய குழந்தைகளையும், பெண்களையும் கடத்தி வருகின்றனர். எனவே, குழந்தைகளை வெளியே விடாதீர்கள் என்று ஒரு நபர் பேசும் ஆடியோவுடன் கூடிய 1 நிமிடமும் 18 வினாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இத்தகவலை செய்தியாக எழுதியும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
இதுகுறித்து உண்மைத் தன்மையைக் கண்டறிய காணொலியில் பேசப்படும் செய்தி குறித்து இணையதளத்தில் தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெற்றதாகப் பதிவுகள் இல்லை. மேலும், இக்காணொலியின் அடிப்படையில் சில தகவல்களைத் தேடிய போது, கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓன் இந்தியா தமிழ், விகடன், நியூஸ் ஜே உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இக்காணொலி தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அச்செய்தியில், "தஞ்சாவூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த, வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டிருந்த வீடியோ செய்தியில் இருந்த சிறுமியும், பரவி வரும் காணொலியில் இருக்கக்கூடிய சிறுமியும் ஒரே சிறுமி என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
Conclusion:
நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், சேலத்தில் திடீரென்று 400 பேர் வெளிநாட்டில் இருந்து இறங்கி உள்ளனர் என்றும், அவர்கள் குழந்தைகளையும், பெண்களையும் கடத்துகின்றனர் என்றும் பரவிய செய்தி வதந்தி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.