தமிழ்நாட்டின் சில தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால், தூத்தக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “#தென்னகத்தை_கைவிட்ட_திமுக” என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதனோடு “தூத்துக்குடி” என்று குறிப்பிடப்பட்டுள்ள காணொலி ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பெரும்வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Climate Extremes என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜூலை 19ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “மத்திய மொராக்கோவின் மௌலே இப்ராஹிம் சென்டரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) ஏற்பட்ட திடீர் வெள்ளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது பழையது என்றும் மொராக்கோ நாட்டில் நடைபெற்ற நிகழ்வு என்றும் கூற முடிகிறது.
Climate Extremesன் ஃபேஸ்புக் பதிவு
தொடர்ந்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுகையில், MM News என்ற யூடியூப் சேனலில், “மொராக்கோவின் அல் ஹவுஸ் மாகாணத்தில் உள்ள மௌலே இப்ராஹிம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம்” என்று கடந்த ஜூலை 20ஆம் தேதி ஷார்ட்ஸை வெளியிட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக மொராக்கோவின் ஆங்கில இணைய ஊடகமான HESPRESS, “பலத்த மழை மற்றும் அதிக வெப்பம் அல் ஹவுஸ் பகுதியில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது” என்ற தலைப்பில் மௌலே இப்ராஹிம் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்த விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்று மொராக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.