Fact Check: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக குறித்த வைரலாகும் காணொலிகள்? உண்மை அறிக
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, தமிழக வெற்றிக் கழகம் குறித்த இரண்டு காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன
By - Ahamed Ali |
Claim:கரூர் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் இறந்த நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் பற்றிய இரண்டு காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் இரண்டு காணொலிகளும் பழையவை
தனது அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தவெகவினர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கரூரில் இத்தனை பேர் இறந்த குற்ற உணர்வு கூட இல்லாமல் தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார், “மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்றால் பாலைவனத்தில் தான் நாங்கள் கூட்டம் நடத்த வேண்டும்” என்று கூறியதாகவும் இரு வேறு காணொலிகள் கரூர் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் (பதிவு 1(Archive), பதிவு 2(Archive) பகிரப்பட்டு வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இரண்டு காணொலிகளும் பழையது என்று தெரியவந்தது.
காணொலி 1:
முதலில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனரா என்பதை கண்டறிய வைரலாகும் காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, காணொலியிலேயே “1.5.25” என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் முதற்கட்டமாக இது மே மாசம் எடுக்கப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.
மேலும்,காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, vilasalnews என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மே 1ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியுடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “தூத்துக்குடி ஸ்மாட் சிட்டி அண்ணாராட்டம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை இன்று (1.5.25 ) காலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் தவெக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை pearlcitynews என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் வெளியிட்டுள்ளது.
காணொலி 2:
தமிழக வெற்றி கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “விஜய் திருச்சி செல்வதை யாராலும் தடுக்க முடியாது..” என்ற தலைப்புடன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தந்தி டிவி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து பேசுகிறார் நிர்மல் குமார். அவர் 5:00 பகுதியில் பேசுகையில், “கூட்டம் கூடுவதற்கு காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலைத் தான் தேர்வு செய்து கொடுத்துள்ளோம், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சியில் உள்ள எங்களது மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையினரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
அதில், காவல்துறையே ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்தாலும் அங்கு கூட்டத்தை நடத்திக் கொள்ள தயார்” என்று கூறுகிறார். பிறகு செய்தியாளர் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை நிர்மல் குமாரிடம் கேட்டபோது, “போக்குவரத்து நெரிசல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்று கூறுகிறார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றால் பாலைவனத்தில் தான் நாங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் ஊர்களில் வைக்க முடியாது என்று பதிலளிக்கிறார்.
Conclusion:
நம் தேடலில் முடிவாக கரூர் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தமிழக வெற்றிக் கழகம் குறித்து வைரலாகும் காணொலி இரண்டும் பழையது என்று தெரியவந்தது.