இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் தொடர்பாக வைரலாகும் காணொலிகள்: உண்மை என்ன?
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன
By Ahamed Ali Published on 14 Oct 2023 12:35 PM GMTஇஸ்ரேல் - பாலஸ்தீன் போர் தொடர்பாக வைரலாகும் காணொலிகள்
ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடர்பாக பல காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதன் ஒருபகுதியாக பாராசூட் உதவியுடன் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் இறங்குவதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஹமாஸிற்கு ஆதரவாக போருக்கு கிளம்புவதாக அறிவிப்பது போன்ற காணொலி ஒன்றும் வைரலாகி வருகிறது.
வைரல் காணொலி 1
வைரல் காணொலி 2
Fact-check:
முதலில், ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் இறங்குவது போன்ற காணொலி குறித்து ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, எக்ஸ் தளத்தில் பலரும் "வைரலாகும் காணொலியில் இருப்பது எகிப்து ராணுவ பயிற்சி மையம்" என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் முதற்கட்டமாக காணொலியில் உள்ள அரபு எழுத்தை கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்துப் பார்த்ததில் "ராணுவக் கல்லூரி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"ராணுவக் கல்லூரி" என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டிட வளாகம்
தொடர்ந்து, இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, எகிப்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வைரலாகும் காணொலியில் உள்ள ராணுவக் கல்லூரியின் முகப்பு பகுதியில் நின்றவாறு குழுப் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. மேலும், கூகுள் மேப்பிலும் இதே போன்ற புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி எகிப்தில் எடுக்கப்பட்டது என்று அறிய முடிகிறது.
இரண்டாவதாக வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Lebanese News and Updates என்ற எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகும் அதே காணொலி கடந்த மே 21ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், "இஸ்ரேலிய ராணுவத் தளத்தை தாக்குவதைப் போன்ற ராணுவப் பயிற்சிக் காணொலியை வெளியிட்டுள்ளது ஹிஸ்புல்லா அமைப்பு. இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களால் வெளியிடப்பட்டிருந்தது" என்று கூறப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக Associated Press, Al Jazeera உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.
எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகும் அதே காணொலி
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாராசூட் உதவியுடன் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் இறங்குவதாக வைரலாகும் காணொலி உண்மையில் எகிப்து நாட்டு ராணுவ அகாடமிக்கு வெளியே எடுக்கப்பட்டது என்றும், அதே போன்று ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸிற்கு ஆதரவாக போருக்கு கிளம்புவதாக வைரலாகும் காணொலி பழையது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.