“கொஞ்சம் அரிசி அள்ளி போட்டா சாதம் வடிச்சிடலாம் போலயே…” என்ற கேப்ஷனுடன் டில்லியில் வெப்பம் 52 டிகிரிக்கு மேல் தாக்கியதால் கட்டிடத்தின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் தொட்டியில் உள்ள தண்ணீர் கொதிப்பதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக ஆய்வு செய்தோம். அப்போது, மே 29 அன்று டெல்லியின் முங்கேஷ்பூர் வானிலை நிலையத்தில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதற்கு “சென்சார் செயலிழப்பு” தான் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெளிவுபடுத்தியுள்ளது.
விசாரணையில், முங்கேஷ்பூரில் உள்ள தானியங்கி வானிலை நிலையத்தில் (AWS) இருந்த சென்சார் பிற சென்சார்கள் பதிவுசெய்த வெப்பநிலையை விட தோராயமாக 3 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலையைப் காட்டியதாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கண்டறிந்தனர் என கடந்த ஜூன் 1ம் தேதி Financial Express செய்தி வெளியிட்டிருந்தது. இதன்மூலம் டெல்லியில் 52 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், இதுபோன்ற தட்ப வெப்பத்தில் தொட்டியில் உள்ள தண்ணீர் கொதிக்குமா என்பது குறித்து ஆய்வை மேற்கொண்டது நியூஸ் மீட்டர். முதலில் 100 டிகிரி செல்சியஸ் தான் தண்ணீரின் கொதிநிலை என்பது அடிப்படையான உண்மை. இந்த வெப்பத்தை அடைந்தால் மட்டுமே தண்ணீர் கொதிக்க துவங்கும். அதேசமயம் 100 டிகிரிக்கு கீழ் தண்ணீர் கொதிக்குமா என்று தேடுகையில், கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக சென்றாலோ அல்லது அதற்கு கீழே சென்றாலோ நீரின் கொதிநிலையானது 70 டிகிரியில் இருந்து 101 டிகிரி வரை மாறுபடும். இந்த மாறுபாட்டிற்கான காரணம் வெவ்வேறு உயரங்களில் வளிமண்டல அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகள் ஆகும் என்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வேதியியல் ஆலோசகர் ஆண்டி பிரன்னிங் Compound Interest என்ற அவரது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது குறித்து நியூஸ் மீட்டரிடம் கூறுகையில், "முதலில் 52 டிகிரி செல்சியஸ் என்று டெல்லியில் பதிவானது என்பது தவறு. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் தெளிவுபடுத்தி உள்ளது. இரண்டாவதாக தொட்டியில் உள்ள தண்ணீரின் மேல் துளிகள் விழுவது போன்று தான் உள்ளதே தவிர தண்ணீர் கொதிக்கவில்லை. மேலிருந்து தண்ணீரை ஸ்பிரே செய்வது போல தான் உள்ளது. அவ்வாறான சூழலில் தண்ணீர் தெறிக்கிறதே தவிற கொதிக்கவில்லை” என்கிறார்.
மேலும், வேலூர் தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் இயற்கை இடர்பாடு தடுப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் G.P.கணபதியிடம் இது தொடர்பாக பேசியது நியூஸ் மீட்டர். அவர் கூறும்போது, "தண்ணீர் கொதிக்க கூடிய அளவு தொட்டி சூடேறும் போது அதன் பகுதிகளில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். ஆனால் இக்காணொலியில் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அதே சமயம் சூரிய ஒளியால் இவ்வாறு கொதிக்க வைக்க முடியாது. மேலும் மேலிருந்து தெறித்து கீழே விழும் தண்ணீர் கொதிநிலையில் இருந்தால் உடனே ஆவி ஆகிவிடும் ஆனால் இக்காணொலியில் அருகில் இருக்கும் தண்ணீர் அப்படியே இருப்பதை நம்மால் காண முடிகிறது அதனால் இத்தகைய தட்பவெப்பத்தால் தண்ணீர் கொதிக்க வாய்ப்பில்லை" என்றார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக டெல்லியில் 52 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானதற்கு காரணம் சென்சார் செயலிழப்பு என்றும் இத்தகைய வெப்பத்தில் தொட்டியில் இருக்கும் தண்ணீர் கொதி நிலையை அடையாது என்றும் வல்லுநர்களின் கூற்றுடன் நிரூபிக்க முடிகிறது.