“இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அறிவார்ந்த கூட்டத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?” என்ற கேப்ஷனுடன் திமுக ஆட்சியைக் குறிக்கும் ஹேஷ்டேக்குகளுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மண் அள்ளும் இயந்திரம் ஒன்று வெள்ள நீரை அள்ளி அருகில் இருக்கும் லாரியில் ஊற்றும் காட்சி பதிவாகியுள்ளது. லாரியில் விழும் தண்ணீர் மீண்டும் தரைக்குச் சென்றுவிடுகிறது. இது போன்ற முட்டாள்தனமான முறையில் சென்னையில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது என்பது போன்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
பரவும் தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பாகிஸ்தானை தவறாக சித்தரித்து தற்போது வைரலாகும் அதே காணொலி ஏற்கெனவே வைரலானது தெரியவந்தது. தொடர்ந்து தேடுகையில், 2018ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி, “பாக்தாதின் தெருவில் இருக்கும் தண்ணீரை எவ்வாறு தொழில்முறையாக அகற்றுகின்றனர் என்பதைப் பாருங்கள்” என்று துருக்கிக்கான அல்ஜசீரா செய்தியாளர் Abdulaziz எக்ஸ் தளத்தில் வைரலாகும் அதே காணொலியை நையாண்டியாக பதிவிட்டுள்ளார்.
Abdulaziz எக்ஸ் பதிவு
மேலும், “இது ஈராக்கின் பாக்தாத் பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்றும் சிலர் இது அஹ்வாஸ் பகுதியில் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர்” என்று அவரே பதிவிட்டுள்ளார். இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக mashreghnews மற்றும் shoaresal என்ற இரு இணையதளங்களும் “மஷ்ரெக் என்ற சைபர்ஸ்பேஸ் பயனர் ஒருவர் அஹ்வாஸ் மழையின் காணொலியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எழுதினார்; அதில், ஈரானின் அஹ்வாஸில் மழைநீரை சேகரிக்கும் இயந்திரம் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, சென்னையில் மண் அள்ளும் இயந்திரத்தைக்கொண்டு முட்டாள்தனமான முறையில் வெள்ளநீர் அகற்றப்படுவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அக்காணொலி ஈராக்கில் எடுக்கப்பட்டதா அல்லது ஈரானில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், நிச்சியமாக இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.