ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேராவின் மறைவிற்குப் பிறகு அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு வாக்கு கேட்டு வந்த திமுகவினரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர் என்று 2 நிமிடம் 19 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, நியூஸ் ஜெ செய்தி நிறுவனம் இதனை செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இந்நிலையில், காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக ஃபேஸ்புக்கில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே காணொலி பல்வேறு ஃபேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டிருப்பது தெரிய வந்தது(பதிவு 1, பதிவு 2, பதிவு 3) இக்காலகட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திருமகன் ஈவேரா இருந்தார். மேலும், அவர் கடந்த ஜனவரி 4-ம் தேதி தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, டுவிட்டரில் இது தொடர்பாக தேடுகையில், பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் நிர்மல் குமார் இதே காணொலியை பதிவிட்டிருந்தார். அதன் கமெண்ட் பகுதியில் இக்காணொலி பழையது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வைரலாகும் காணொலியில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்காக வந்த திமுகவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர் பேசிய வீடியோவை புலி என்ற டுவிட்டர் பக்கம் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிகிறது.
அப்பாஸின் விளக்கப் பதிவு
Conclusion:
இறுதியாக, 2022ம் ஆண்டு வெளியான காணொலியை தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடந்த சம்பவம் போன்று தவறாக எதிர்கட்சியினர் சித்தரித்து காணொலியை பரப்பி வருகின்றனர் என்பதை நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாக கூற முடிகிறது.