“டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு கடந்த 10 ஆண்டுகளாக 85,000 முஸ்லிம் பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கி வருகிறது.. ஆனால் அவர்களின் கணவர்கள் அனைவரும் உயிருடன் உள்ளனர்.. இப்போது டெல்லி முதல்வர் ரேகா குப்தா முழு ஊழலையும் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளது” என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்திட்டம் அனைத்து மதத்தினருக்கும் ஆனது என்று தெரியவந்தது.
டெல்லியில் வழங்கப்பட்ட விதவைகள் ஓய்வூதியம் தொடர்பான தகவலை டெல்லி முதல்வர் ரேகா குப்தா அம்பலப்படுத்தினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை என்று தெரியவந்தது. தொடர்ந்து, இந்த விதைவை ஓய்வூதிய திட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படுகிறதா என்று தேடினோம்.
ஓய்வூதிய திட்டத்திற்கான தகுதிகள்
அப்போது, டெல்லி குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை இணையதளம் விதவைகள் ஓய்வூதிய திட்டத்திற்கான பொதுவான தகுதியாக சிலவற்றை குறிப்பிட்டுள்ளது. அதில், எந்த இடத்திலும் இஸ்லாமிய பெண்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை. மேலும், கடந்த ஜூலை 1ஆம் தேதி The Hindu ஊடகம் டெல்லி விதவைகள் ஓய்வூதியம் தொடர்பான செய்தி வெளியிட்டிருந்தது. அதில், டெல்லி மகளிர் ஓய்வூதியத் திட்டத்திற்கு 60,000 பயனாளிகள் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Hindu வெளியிட்டுள்ள செய்தி
டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் விதவை ஓய்வூதிய திட்டம், விதவைகளுக்கு மட்டுமானது அல்ல. இது விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், பிரிந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் அனைவருக்குமானது. இவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாதாந்திர நிதியுதவியாக ரூபாய் 2,500 வழங்கப்படுகிறது. இது மத அடிப்படையிலான திட்டமும் அல்ல என்று இவற்றின் வாயிலாக தெரியவருகிறது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக டெல்லியில் செயல்படுத்தப்படும் விதவைகள் ஓய்வூதிய திட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் செயல்படுத்தப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.