நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரவு விருந்து வழங்கினார். இதற்கான அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பதற்குப் பதிலாக "பாரத ஜனாதிபதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒன்றிய பாஜக அரசு இந்தியாவின் பெயரை "பாரத்" என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்ந நிலையில், "அதிமுக பெயர் மாற்றம்" என்ற தலைப்பில், "இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் "அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்" என மாற்றப்படும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக செப்டம்பர் 5ஆம் தேதியிட்ட தந்தி டிவியின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் தந்தி டிவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 5ஆம் தேதிக்கான பதிவுகளில் தேடினோம். அப்போது, வைரலாகும் நியூஸ் கார்டை ஒத்த அதே நியூஸ் கார்டில் "மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு" என்ற தலைப்புடன் பழனிச்சாமி பேசிய செய்தி பதிவிடப்பட்டிருந்தது. இதனையே எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்று முதற்கட்டமாக கூற முடிகிறது.
தந்தி டிவியின் ஃபேஸ்புக் பதிவு
இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அஇஅதிமுக பெயர் மாற்றம் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் பதிவாகவில்லை. அதேசமயம், கடந்த 5ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்ததாக நியூஸ் ஜெ காணொலி ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
நியூஸ் ஜெ வெளியிட்டுள்ள காணொலி
அதில், 7:37 முதல் 8:41 வரையிலான பகுதியில் இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் பழனிச்சாமி, "இன்னும் பார்க்கவில்லை இது தொடர்பான முழு விவரம் கிடைத்த பிறகு கூறுகிறேன்" என்றார். அதே சந்திப்பில் செய்தியாளர் ஒருவர், "அவ்வாறாக பெயர் மாற்றப்பட்டால் அஇஅதிமுகவில் வரும் இந்தியா என்ற பெயரும் பாரத் என்று மாற்றப்படுமா" என்ற கேள்விக்கு, "நான் பார்த்துவிட்டு தான் விவரமாக கூறமுடியும். நீங்கள் கேட்கும் கேள்வி உண்மையா, பொய்யா என்று முழுமையாக தெரிந்த பிறகு பதில் கூறுகிறோம்" என்று பதிலளிக்கிறார்.
மேலும், "புது Concept ஆ இருக்கே - பாரத் பெயர் மாறினால் கட்சி பெயர் மாறுமா? செல்லூர் ராஜூ சொன்ன நச் பதில்!!" என்ற தலைப்பில் பாலிமர் நியூஸ் கடந்த 10ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள காணொலியில், ‛‛இந்தியாவை பாரத் என மாற்றினால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் உள்ள அனைத்திந்திய என்பதற்கு பதில் அனைத்து பாரதிய என மாற்றுவீர்களா?" என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இது புது கான்செப்டா இருக்கே. அது வரும்போது பார்த்து கொள்ளலாம்'' என கலகலப்பாக பதிலளித்தார்.
Conclusion:
நமது தேடலின் முடிவாக அஇஅதிமுகவின் பெயர் "அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்" என மாற்றப்படும் என்று பழனிசாமி கூறியதாக வைரலாகும் தந்தி டிவியின் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்றும் அவ்வாறாக எந்த ஒரு கருத்தையும் அவர் கூறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.