பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாரா அபிநந்தன் வர்தமான்? உண்மை என்ன?
இந்திய விமானப் படையைச் சேர்ந்த குழு கேப்டன் அபிநந்தன் வர்தமான் பாஜகவின் தாமரைச் சின்னத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 21 Aug 2023 1:00 PM ISTஇந்திய விமானப்படையின் அபிநந்தன் வர்தமான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக வைரலாகும் புகைப்படம்
"இது யாருன்னு தெரியுதா?? இவர் தான் இந்திய விமானி அபிநந்தன்!! இப்ப புரியுதா!!?? இது எல்லாமே ஒரு செட்டப் நாடகம்னு புரியுதா மக்களே!!" என்ற தகவலுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் நபர் காவித்தூண்டு அணிந்து, பாஜகவின் தாமரைச் சின்னத்தை தனது மார்பில் குத்தி உள்ளார். மேலும், அவர் இந்திய விமானப் படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அபிநந்தன் வர்த்தமானின் தோற்றத்தில் இருப்பதாக கூறி பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்தமான், இந்திய விமானப் படையில் குழு கேப்டனாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.
இந்தத் தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற அபிநந்தனின் விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இவர் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த அபிநந்தனுக்கு அவரது வீரத்தைப் பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் குழு கேப்டனாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய, அதனை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பிபிசி மராத்தி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "புகைப்படத்தில் அபிநந்தனைப் போல தோற்றமளிக்கும் நபருக்கும் அபிநந்தனுக்கும் நிறைய வித்தியாசத்தை கவனிக்க முடிந்தது. அதன்படி, அபிநந்தனின் உதடுகளுக்கு கீழே இடது பக்கத்தில் மச்சம் உள்ளது. ஆனால், புகைப்படத்தில் இருப்பவரின் முகம் அப்படி இல்லை. புகைப்படத்தில் இருப்பவருக்கு வலது கண்ணுக்கு அருகில் மச்சம் உள்ளது. ஆனால், உண்மையான அபிநந்தனுக்கு வலது கண்ணுக்கு அருகில் அப்படி ஒரு மச்சம் இல்லை.
மேலும், புகைப்படத்தில் உள்ள நபருக்குப் பின்னால் "சமோசா மையம்" என்று குஜராத்தி எழுத்துக்களுடன் ஒரு பலகை உள்ளது, எனவே இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விமானப்படை விதிகள் 1969ன் படி எந்த அதிகாரியும் எந்த அரசியல் அமைப்பு அல்லது இயக்கத்தில் சேரவோ அல்லது ஆதரிக்கவோ முடியாது.
அதேபோன்று, வைரலான புகைப்படத்தில் இருப்பது விங் கமாண்டர் அபிநந்தன் அல்ல என்று இந்திய விமானப்படை வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்(தற்போது எக்ஸ்) உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு கணக்குகள் கிடையாது என்றும் அவர் பெயரில் உள்ள அனைத்து கணக்குகளும் போலிக் கணக்குகள்" என்று இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ்(முன்பு டுவிட்டர்) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் எக்ஸ் பதிவு
Conclusion:
முடிவாக, காவித்துண்டுடன் பாஜகவின் சின்னத்தை தனது மார்பில் குத்தி இருக்கும் நபர் இந்திய விமான படையின் அபிநந்தன் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.