கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கலவரம் பூண்டுள்ளது. இதனை சுற்றி பொய் செய்திகளும் வதந்திகளும் பரவத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், "மணிப்பூரில் அந்த கிறித்தவ பெண்களின் ஆடையை யாரும் அவிழ்க்கவில்லை.. அவர்கள் தான் ஆடையை அவிழ்த்து விட்டு துணை ராணுவ படையை விரட்டுகிறார்கள்.. சர்ச்சில் பாதிரியார் கொடுத்த பயிற்சி அப்படி.." என்று கூறி 36 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய, கூகுளில் இது தொடர்பாக கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் காணொலியை gyanendra shukla என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மே 16ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில், "சந்தோலி: முகல்சராய் முனிசிபல் கவுன்சில் தொகுதியில் திருநங்கை சோனு கின்னார் முன்னிலை வகித்தார். ஆனால், பாஜக வேட்பாளர் மால்தி தேவி 138 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பத்திரிக்கையாளர் gyanendra shuklaவின் டுவிட்டர் பதிவு
இதனிடையே, சோனு கின்னாருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே நின்ற திருநங்கைகள் தங்களது பாணியில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் சோனு கின்னார் 397 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்." என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் சந்தோலி மாவட்டத்தில் நடைபெற்றது என்று தெரியவருகிறது.
மேலும், இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள UPTak, "வாக்கு எண்ணிக்கையின் போது, கின்னார் சமூக மக்கள் ஆடையின்றி சலசலப்பை உருவாக்கும் காணொலி ஒன்று வெளியானது. உண்மையில், பாஜக வேட்பாளரின் வாக்கினை மீண்டும் எண்ண கோரிக்கை வைக்கப்பட்ட போது ஏற்பட்ட தகராறு அது" என்று கூறப்பட்டுள்ளது. இவரது தேர்தல் வெற்றி குறித்து Navbharat Times விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
UP Takன் டுவிட்டர் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக, மணிப்பூரில் கிறிஸ்தவப் பெண் ஆடையின்றி துணை ராணுவப் படையினரை விரட்டுவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும் அதில் இருப்பது திருநங்கை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.