“அரபுநாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள் இவனுங்கதான் வாய்கிழிய பெண் விடுதலைபத்திப்பேசுவானுங்க” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், புர்கா அணிந்துள்ள பெண்களின் முகத்தை ஒரு முதியவர் திறந்து பார்ப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இப்பெண்கள் அரபு நாட்டு சந்தையில் விற்கப்படுவதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இந்நிகழ்வு தெரு நாடகத்தின் ஒரு பகுதி என்று தெரியவந்தது.
இதுகுறித்த உண்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Minorities Eye என்ற ஈராக்கைச் சேர்ந்த ஊடகம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காணொலி ஒன்றை பதிவிட்டு இருந்தது. அதில், “யசீதி இனப்படுகொலை மற்றும் சிஞ்சார் துயரத்தின் நினைவாக ஆர்யன் ரஃபீக்கின் “The Unheard Screams of the Ezidish Angels” என்ற நாடகம் நேரடியாக அரங்கேற்றப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன், 3:26 பகுதியில் வைரலாகும் காணொலியில் உள்ள அதே காட்சி இடம் பெற்றுள்ளது.
ஆர்யன் ரஃபீக் குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அதில் “The Unheard Screams of the Ezidish Angels” என்ற அவரது நாடகத்தின் காணொலியை 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி பதிவிட்டுள்ளார். மேலும், Dogrula என்ற IFCNஆல் அங்கீகரிக்கப்பட்ட துருக்கிய பேக்ட்செக் ஊடகம் வெளியிட்டுள்ள காணெலியை ஆர்யன் ரஃபீக் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.
அதன்படி, 2023ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி Erbil Citadel (Northern Iraq) என்ற இடத்தில் இந்த நாடகம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, வைரலாகும் காணொலியில் தான் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி இருப்பதை VRT ஊடகத்திற்கு உறுதிப்படுத்தினார் ஆர்யன் ரஃபிக்.
மேலும், ISISஆல் கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்ட பெண்களின் தலைவிதியைப் பற்றிய நீண்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியே இந்த காணொலி என்றும் தெரிவித்தார். ISISன் கீழ் யசீதி பெண்களின் பாலியல் அடிமைத்தனம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தாலும், வைரலாகும் காணொலியில் உள்ள காட்சிகள் ஆர்யன் ரஃபிக் என்ற குர்திஷ் கலைஞரின் தெரு நாடகமே.
Conclusion:
முடிவாக நம் தேடலில் அரபு நாட்டு சந்தையில் பெண்கள் விற்கப்படுவதாக வைரலாகும் காணொலி உண்மையில் ஆர்யன் ரஃபீக் என்பவருடைய தெரு நாடகத்தின் ஒரு பகுதி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.