Fact Check: இலங்கையில் விளைந்த உலகின் மிகப்பெரிய பலாப்பழம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் 240 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய பலாப்பழம் விளைந்துள்ளதாக காணொலி வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 31 March 2025 8:54 PM IST

Fact Check:  இலங்கையில் விளைந்த உலகின் மிகப்பெரிய பலாப்பழம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
Claim:இலங்கையில் 240 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பலாப்பழம் விளைந்துள்ளது.
Fact:இந்த தகவல் தவறு. பரவும் காணொலி AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய பலாப்பழம் விளைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலியுடன் தகவல் வைரலாகி வருகிறது. அதில், மிகப்பெரிய பலாப்பழத்தின் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், அப்பழத்தின் எடை 240 கிலோ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Fact-check:

நியூஸ்மீட்டர் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

முதலில் உலகின் மிகப்பெரிய பலாப்பழம் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, News 18 ஊடகம் 2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி “கேரளாவில் 50 கிலோவுக்கு மேல் எடையுள்ள இரண்டு ராட்சத பலாப்பழங்கள் கின்னஸ் உலக சாதனை படைக்க போட்டியிடுகின்றன” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, “கொல்லத்தில் உள்ள எடமுலக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜான் குட்டியின் வீட்டு முற்றத்தில் பெரிய பலாப்பழம் வளர்ந்திருந்தது. அதனை தனது உறவினர்களின் உதவியுடன் பறித்து அளந்து பார்த்தபோது 51.5 கிலோ எடையும் 97 சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாக இருந்தது.

இதுகுறித்த குட்டி அருகிலுள்ள வேளாண் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். மேலும், கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் விரைவில் வருகை தருவதாக உறுதியளித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

கொல்லத்தில் உள்ள இந்த மாபெரும் பழம் செய்திகளில் இடம்பிடித்து வரும் நிலையில், மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருந்து இதுபோன்ற மற்றொரு பழம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் வசிக்கும் கண்ணூரைச் சேர்ந்த வினோத்திற்கு சொந்தமான பண்ணையில் விளைந்துள்ள பலாப்பழம் 52.2 கிலோ எடையுடன் உள்ளது. உலக சாதனை படைக்கும் வாய்ப்புகளை ஆராய வினோத் திட்டமிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேடுகையில் 2016ஆம் ஆண்டு புனேவில் விளைந்த 42.72 கிலோ எடை மற்றும் 57.15 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பலாப்பழம்தான் தற்போது வரை கின்னஸ் புத்தகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பலாப்பழமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


(கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள உலகின் மிகப்பெரிய பலாப்பழம் குறித்த தகவல்)

வைரலாகும் காணொலியை ஆய்வு செய்ததில் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பதற்கான தடயங்கள் இருந்தன. இதனைக் கொண்டு அக்காணொலியை முதலில் Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவை தந்தது.

தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்த DeepFake O Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது, 65.8% இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி தான் என்று தெரியவந்தது.




முடிவாக, நம் தேடலில் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் விளைந்துள்ளதாக வைரலாகக் கூடிய காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.






Claim Review:240 எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பலாப்பழம் இலங்கையில் விளைந்ததாக பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இந்த தகவல் தவறு. பரவும் காணொலி AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
Next Story