Fact Check: டெல் அவிவ் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதா யேமன்? உண்மை என்ன

யேமன், இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் மீது நடத்திய தாக்குதலால் சிதிலமடைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 27 May 2025 1:09 AM IST

Fact Check: டெல் அவிவ் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதா யேமன்? உண்மை என்ன
Claim:இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது யேமன் தாக்குதல் நடத்தியது
Fact:வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

“இஸ்ரேல் நாட்டில் உள்ள எந்தப் பகுதியும் இனிமேல் பாதுகாப்பாக இருக்காது என ஏமன் அறிவித்துள்ளது. அவர்கள் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை மட்டும் நாம் பகிர்கிறோம் நமது பேராளிகள் அங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் காட்சிகளை ஏன் நாம் பகிர்வதில்லை இது இஸ்ரோல் தலைநகர் டெல்அவி விமான நிலையம் ராக்கெட் தாக்குதல் மூலம் ஏமன் அழித்துவிட்டது” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியா விமானங்கள் வெடித்து சிதிலமடைந்து காணப்படும் காட்சி பதிவாகியுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

முதலில் டெல் அவிவ் விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த மே 4ஆம் தேதி Times of Israel இத்தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகளால் ஏவப்பட்ட ஒரு ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை (மே 5) காலை பென் குரியன் விமான நிலையத்தின் ஒரு பகுதியை தாக்கியது.


Times of Israel வெளியிட்டுள்ள செய்தி

இதில் ஆறு பேர் காயமடைந்தனர், அவர்களில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து பல நூறு யார்ட் தொலைவில், விமான நிலையத்தின் பிரதானமான மூன்றாவது முனையத்திற்கு அருகில் உள்ள தோப்பிற்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தின் புகைப்படத்துடன் ABC News அதே தேதியில் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வைரலாகும் காணொலியில் உள்ளது போல் பெரிய அளவில் குண்டுவெடிப்பு நிகழவில்லை என்று தெரியவந்தது.

மேலும், ஹவுத்திகளால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை, வான் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) கூறியதாக Times of Israel நேற்று (மே 25) செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல் மூலமாகவும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய முதலில், காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள 3AMELYON என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடினோம். அப்போது, வைரலாகும் அதே காணொலி கடந்த மே 12ஆம் தேதி அப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அதில் சிதிலமடைந்துள்ள விமானத்தில் “BEN GURION” என்று எழுதப்பட்டுள்ளது. பொதுவாக விமான நிறுவனங்கள் தான் இவ்வாறு தங்களது நிறுவனத்தின் பெயரை எழுதுவது வழக்கம். நாம் இப்பெயரைக்கொண்டு தேடியதில் அவ்வாறான எந்த ஒரு விமான நிறுவனமும் இல்லை என்று தெரியவந்தது.


“BEN GURION” என்று எழுதப்பட்டுள்ள விமானம்

மேலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்கையில் அதன் பயோவில் “Resisting Artificial Intelligence” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று வைரலாகும் காணொலியை போன்றே பல்வேறு போர் சேத காட்சிகள் மற்றும் ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளான காட்சிகள் போன்றவை அதே பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


DeepFake-O-Meter தளத்தின் ஆய்வு முடிவு

இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக DeepFake-O-Meter இணையதளத்தில் வைரலாகும் காணொலியை பதிவேற்றி ஆய்வு செய்கையில் மூன்றில் இரண்டு டிடெக்டர்கள் 60% முதல் 99% வரை வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி தான் என்ற முடிவைத் தந்தன.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் சிதிலமடைந்துள்ளதாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது.

Claim Review:இஸ்ரேல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய யேமன் என்று வைரலாகும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:Misleading
Fact:வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
Next Story