Fact Check: கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனரா? உண்மை அறிக
திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
By Ahamed Ali
Claim:இளைஞர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக வைரலாகும் காணொலி
Fact:காதல் விவகாரத்தால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தவறாக பரப்பி வருகின்றனர்
“பள்ளி சிறுவர்கள் கஞ்சா போதையில்.. திருவண்ணாமலையில் அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு பள்ளி படிக்கும் சிறுவர்கள் கஞ்சா போதையில் ஒருவருக்கொருவர் கொலை வெறி தாக்குதல் மற்றும் கத்தி குத்து…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், மூன்று இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இவ்விளைஞர்கள் கஞ்சா போதையில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.
உண்மையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனரா என்று கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, திருவொற்றியூர் நா.ஷயாம் என்ற எக்ஸ் பயனர் கடந்த ஜூலை 2ஆம் தேதி வைரலாகும் காணொலியுடன் பாலிமர் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் காதல் பிரச்சனையில் பிளஸ் ஒன் மாணவர் கொலை என்றும் திருவண்ணாமலையில் சுனில் என்ற மாணவனை கொலை செய்த இளைஞரை தாக்கும் காணொலி வெளியானது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஜூலை 1ஆம் தேதி விகடன் இது தொடர்பாக விரிவான செய்தியை வெளியிட்டு இருந்தது. அதன்படி, “திருவண்ணாமலை தாமரை நகர்ப் பகுதியில் பதினோராம் வகுப்புப் பயின்று வந்த கோகுல் (எ) சுனில் (16) நேற்று (ஜூன் 30) இரவு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்து என்பவரை அன்று இரவே திருவண்ணாமலை நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்துவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி கோட்டை முத்து பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், இளம்பெண்ணைத் தேடி நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார் கோட்டை முத்து.
அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பதினோராம் வகுப்பு மாணவன் உட்பட மூன்று பேர் சென்று கோட்டை முத்துவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், இந்த மோதலில் கோட்டை முத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் குத்தியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக திருவண்ணாமலை நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாித்து வருகின்றனர் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகமும் காணொலியாக வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, இம்மானவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போது கஞ்சா போதையில் இருந்தனரா என்பது குறித்து திருவண்ணாமலை நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டோம், அதற்கு கொலை செய்யப்பட்ட சுனில் மற்றும் கைது செய்யப்பட்ட கோட்டை முத்து ஆகிய இருவரும் டீ டோட்டலர் என்றும் அவர்கள் கஞ்சா அடித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்றும் காவல்துறையினர் விளக்கினர்.
Conclusion:
முடிவாக, காதல் விவகாரம் தொடர்பாக இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட கொலைச் சம்பவத்தின் காணொலியை கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாக தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.