"நேற்று முன்தினம் கேரளாவில் ஐந்து நிமிடங்கள் கடல் எந்தவித அசைவுமின்றி படைத்தவனின் கட்டுப்பாட்டில்… அனைத்தும் அவன் செயல்..., அவனின்றி ஓர் அணுவும் அசையாது.. ஓம் நமசிவாய" என்ற கேப்ஷனுடன் ஒரு நிமிடம் 57 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நியூஸ்மினிட் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "கடந்த அக்டோபர் 29-ம் தேதி மாலை கேரளாவின் கோழிக்கோடு நைனாம்வலப்பு கடற்கரையில் 50 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்வாங்கியது. இந்த நிகழ்வு சில மணி நேரம் நீடித்தது. மேலும், கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும், கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியது" எனக் கூறப்பட்டிருந்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் நீர் உள்வாங்கியது தொடர்பாக யூடியூப்பில் தேடியபோது, நியூஸ் 18 கேரளா நேரலை ஒன்றை வழங்கி இருந்தது. அந்தக் காணொலியில் கடல் உள்வாங்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. மேலும், இதன் காரணமாக கடல் மண் திட்டுகள் மற்றும் சிறு கற்கள் வெளியே தெரிந்துள்ளன. இதுமட்டுமின்றி, காணொலியின் 47 விநாடி மற்றும் 1 நிமிடம் 28 விநாடி ஆகிய பகுதிகளில் கடல் நீர் அசைவதை நம்மால் காணமுடிகிறது.
இதே செய்தியை ஏசியா நெட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் காணொலியுடன் வெளியிட்டுள்ளன. அதிலும், கடல் அசைவதை நம்மால் காண முடிகிறது. பொதுவாகவே கடல் உள்வாங்கினால் சீற்றமின்றி அமைதியாகவே காணப்படும் அது மட்டுமின்றி மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சற்று நேரம் எடுக்கும்.
Conclusion:
நமது தேடலின் மூலம் கிடைத்திருக்ககூடிய ஆதாரங்களின் அடிப்படையில், கடல் நீர் உள்வாங்கியதால் கடலின் மேல்பகுதியில் இருந்த மண் திட்டுகள் மற்றும் சிறு கற்கள் வெளியே தெரிந்துள்ளது. இப்பகுதியை தூரத்தில் இருந்து ரெக்கார்ட் செய்திருப்பதால் கடல் எவ்வித அசைவுமின்றி இருப்பது போன்று தெரிகிறது. இதனை தவறாக புரிந்துகொண்டு பரப்பி வருகின்றனர்.