"கோயம்புத்தூரிலிருந்து திருச்சூருக்கு இரண்டு மணிநேர பயணமாக இருந்த தூரத்தை 10 நிமிடத்தில் கடந்துவிடலாம் என்று ஆகிய அதிசயம்! மலையை குடைந்து குகை வழிப்பாதை அமைத்ததுதான் காரணம். எந்த திராவிட ஊடகங்களும் மத்திய அரசு மீது உள்ள பொறாமை காரணமாக இது பற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்காதே !!!" என்ற தகவலுடன் 45 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குதிரன் சுரங்கப்பாதை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜூலை 31ஆம் தேதி 2021ஆம் ஆண்டு, இந்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், "கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பக்கத்தை இன்று திறக்கிறோம். மாநிலத்தின் முதல் சுரங்கப்பாதையான இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பை மேம்படுத்தும். 1.6 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பீச்சி-வாழானி வனவிலங்கு சரணாலயம் வழியாக வடிவமைக்கட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நிதின் கட்கரியின் டுவிட்டர் பதிவு
"தேசிய நெடுஞ்சாலையின் மண்ணுத்தி-வடக்கேஞ்சேரி சாலையில் குதிரன் என்ற இடத்தில் இரண்டாவது சுரங்கப்பாதை வியாழக்கிழமை (ஜன. 20ஆம் தேதி) போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. கேரளாவை மற்ற தென்னிந்திய மாநிலங்களுடன் இணைக்கும் இந்த முக்கிய பாதை சுமூகமான பயணத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முதல் சுரங்கப்பாதை 2021ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது.
மேலும், இந்த இரட்டை சுரங்கப்பாதை தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு வழி சாலை சுரங்கங்களில் ஒன்றாகும். முதல் சுரங்கப்பாதை 997 மீட்டர் நீளம் கொண்டது, இரண்டாவது சுரங்கப்பாதை 987 மீட்டர் நீளம் கொண்டது" என்று 2022ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், குதிரன் சுரங்கப்பாதை குறித்து யூடியூபில் தேடுகையில் தற்போது வைரலாகும் வீடியோவை போன்று பல வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.
அதேபோன்று கோயமுத்தூரில் இருந்து திருச்சூர் செல்ல சுமார் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆகும் என்று கூகுள் மேப் உதவியுடன் கூற முடிகிறது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் காணொலி கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதை என்றும் இது கோயமுத்தூரில் இருந்து கேரளாவுக்கு செல்லும் போது இருக்கக்கூடிய குதிரன் சுரங்கப்பாதை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், இதில் பயணம் செய்வதன் மூலமாக திருச்சூரை 10 நிமிடத்தில் அடையலாம் என்பதிலும் உண்மை இல்லை என்பதும் தெரியவருகிறது.