கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், “தேசிய கொடியின் முடிச்சு இறுக்கமான நிலையில் இருந்த வேளையில் தேசப்பற்று கொண்ட காகத்தின் உதவி. சூப்பர்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், காகம் ஒன்று தேசியக்கொடியை கம்பத்தின் மேலே அவிழ்த்துவிடும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மையை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Reflect News Tamil என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.
அதில், வைரலாகும் காணொலியில் பதிவான சம்பவத்தின் மற்றொரு கோணத்தில் படமாக்கப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி, "தேசியக்கொடியை நோக்கி வரும் காகம் கொடிக்கம்பத்தில் மோதவில்லை மாறாக, கொடிக்கம்பத்திற்கு பின்னால் இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து செல்கிறது. காகம் அமர்ந்து செல்லும் நேரமும், கொடி அவிழும் நேரமும் ஒன்றாக இருப்பதால், காகம் தேசியக்கொடியை அவிழ்ப்பது போன்று உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காணொலி குறித்து நியூஸ் மீட்டர் மலையாளத்திற்கு இச்சம்பவம் நடைபெற்ற கேரள மாநிலம் மரமங்களம் அங்கன்வாடியைச் சேர்ந்த ஆசிரியர் உம்முகுல்சு தொலைபேசி வாயிலாக அளித்த விளக்கத்தில், “சுதந்திர தினத்தையொட்டி மாம்பட்டு ஊராட்சியின் 7வது வார்டு உறுப்பினர் தேசியக் கொடியை ஏற்றினார். அச்சமயம் காணொலியில் இருப்பது போன்ற ஒரு காக்கையை நாங்கள் யாரும் அப்போது பார்க்கவில்லை. கொடி ஏற்றுவதில் வேறு எந்த தடையும் இல்லை.
பின்னர், விழாவின் காணொலியை குழுவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர். அப்போது, தான் அப்படி ஒரு காகம் பகிரப்பட்ட காணொலியில் இருந்தது. முதலில் கொடிமரத்திற்கு காகம் வருவது போல் தெரிந்தது. ஆனால், மற்றவர்கள் பகிரும் காணொலியைப் பார்த்தவுடன் அப்படி இல்லை என்பது தெளிவானது. உண்மையில் காகம் தென்னைமர ஓலையில் அமர்ந்து செல்கிறது. இந்த தென்னை மரம் அங்கன்வாடி வளாகத்திற்கு வெளியே உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், மற்றொரு கோண காணொலியையும் அவர் நம்மிடையே பகிர்ந்தார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தேசியக் கொடியின் முடிச்சை காகம் ஒன்று அவிழ்த்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அக்காகம் கொடிமரத்திற்கு அருகே உள்ள தென்னைமரத்தின் கிளையில் அமர்ந்து சென்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.