"இந்திரா காலில் விழுந்த கருணாநிதி" என்ற கேப்ஷனுடன் 7 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வயதான பெண்மணியின் காலில் விழுகிறார். இப்பெண்மணியை, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என்று குறிப்பிடுகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இதே காணொலி கடந்த சில வருடங்களாக வைரலானது தெரியவந்தது. மேலும், #DMK4TN என்ற டுவிட்டர் பக்கம் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சென்னை – அண்ணா அறிவாலயத்தின் திறப்புவிழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி ராணி அண்ணா அவர்களிடம், தலைவர் கலைஞர் அவர்கள் ஆசி பெற்றார்; அந்த வீடியோவை திரித்து – மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையை விளக்கும் டுவிட்டர் பதிவு
தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் அண்ணாவின் மனைவி கலந்து கொண்டாரா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "தொண்டர்களுக்கு அறிவாலயம்… கருணாநிதிக்கு உயிராலயம்!" என்ற தலைப்பில் விகடன் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கட்டுரை ஒன்ற வெளியிட்டு இருந்தது. அதில், "அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின்போது பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணியம்மையார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
இறுதியாக, இந்திரா காலில் விழுந்தார் கருணாநிதி என்று பரவக்கூடிய காணொலி பொய்யானது என்றும் அதில் இருக்கக்கூடிய பெண்மணி அண்ணாவின் மனைவி என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.