நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 136 இடங்களைப் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநில முதல்வராக காங்கிரஸின் மூத்த தலைவர் சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .
இந்நிலையில், "#கர்நாடகாவில் பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும் சிவக்குமார்.. பதவியே இன்னும் ஏற்கவில்லை அதற்க்குள் சரவெடி" என்ற கேப்ஷனுடன் 28 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவக்குமார் புத்தகம் ஒன்றை கிழித்து எறிகிறார். இதன் மூலம் பதவியேற்கும் முன்பே சாவர்க்கரின் பாடம் அடங்கிய புத்தகத்தை கிழித்து எறிகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஒன் இந்தியா கன்னடா 2022ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கன்னட மொழியில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "மாநில அரசால் உருவாக்கப்பட்ட ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழு திருத்தியமைத்த பாடப் புத்தகம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கேபிசிசி தலைவர் டி. கே. சிவக்குமார் மாநாட்டு மேடையில் திருத்தப்பட்ட உரையின் நகலை கிழித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்" என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தேடுகையில் வைரலாகும் காணொலியுடன் "கர்நாடக பாடப்புத்தக சர்ச்சை: டி.கே.சிவக்குமார், திருத்தப்பட்ட பாடப்புத்தகத்தின் நகலை கிழித்தெறிந்தார்" என்ற தலைப்பில் தி எக்கனாமிக் டைம்ஸ் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் செய்தியாக வெளியிட்டுள்ளது. மேலும், "இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும்" என்று டி.கே. சிவக்குமார் கூறினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அப்படி அவர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் பதிவாகவில்லை.
தி எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
இறுதியாக, நமது தேடலின் மூலம் இனி சாவர்க்கர் பாடம் கிழித்து எறியப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியதாக பகிரப்படும் காணொலியில் உண்மை இல்லை என்றும், அவர் கிழித்தெறிவது கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது திருத்தி அமைக்கப்பட்ட பாடப்புத்தகத்தின் நகல் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.