கர்நாடகாவில் ஹிஜாபிற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 24 May 2023 5:01 PM ISTகர்நாடக மாநில முன்னாள் பாஜக அரசு பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியக்கூடிய ஹிஜாபை தடை செய்து கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இச்சூழலில் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 136 இடங்களை பிடித்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த மே 20ஆம் தேதி காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் புர்கா (ஹிஜாப்) அணிந்து வர அனுமதி. மாஷா அல்லாஹ்." என்ற கேப்ஷனுடன் 26 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள் சிலர் ஒரு கட்டிடத்தின் நுழைவாயிலை தாண்டி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
ஹிஜாப் பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சட்டப் போராட்டம் நடத்தினர். முதலில், ஹிஜாப்பிற்கான தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அரசு நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு மாணவர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளதா இல்லையா என்பது குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் தற்போது வரை பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை நீடித்து வருகிறது.
இந்நிலையில், அந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து கூகுளில் தேடினோம். அப்போது, கடந்த ஜனவரி 23ஆம் தேதி தி இந்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கான உரிமையைக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தாக்கல் செய்த புதிய மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைப்பது குறித்து விரைவில் பரிசீலிப்பதாக இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திங்களன்று தெரிவித்தார்." என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடகவின் குல்பர்கா உத்தரா சட்டமன்றத் தொகுதியின் பெண் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினரான கனீஷ் பாத்திமா, காங்கிரஸ் ஹிஜாப் தடையை நீக்கும் என்று மே 21ஆம் தேதி குவிண்ட் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதேபோன்று, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்தபோது, பாஜக ஆட்சியின் போது ரத்து செய்யப்பட்ட இஸ்லாமியர்களுக்கான நான்கு விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதே தவிர ஹிஜாப் தடையை நீக்குவதாக எங்கும் கூறப்படவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கர்நாடகாவில் ஹிஜாபுடன் பரீட்சை எழுதச் செல்லும் இஸ்லாமிய பெண்கள் என்ற கேப்ஷனுடன் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் காணொலிகள்(பதிவு 1, பதிவு 2) பதிவாகி உள்ளன.
Conclusion:
நமது தேடலின் முடிவாக கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை ஹிஜாபிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அதோடு பரவி வரும் காணொலி 2022ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.