"இந்தியாவின் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மாயாவதி , திமுக தலைவரும் முதல்வர் முக.ஸ்டாலின் போன்றோர் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்த பணம் அனைத்தும் செல்லாக்காசாகி விட்டது. ஆதாரத்துடன் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாங்கே" என்ற தகவலுடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில்(Archive link) வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மாறாக, "சுவிஸ் வங்கிகளில் இருக்கும் கருப்புப் பணம் முக்கியமாக இந்தியர்களுடையது தான்: ஜூலியன் அசாஞ்சே" என்ற தலைப்பில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தி எக்கனாமிக் டைம்ஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் எதிர் காலத்தில் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் அப்படி எந்த ஒரு பட்டியலையும் வெளியிட்டதாகச் செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து, இது தொடர்பாக தேடுகையில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இந்து தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில், சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு நிதி கணக்குகள், தகவல்களை சுவிட்சர்லாந்து வரிகள் நிர்வாக அமைப்பு பகிர்ந்துள்ளது. இந்த தகவல்கள் பரிமாற்ற விவரங்கள் முழுமையாக ரகசியமானவை" எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், "இதுவரை 31 லட்சம் வங்கிக்கணக்குகள் தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு 75 நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. அவர்களிடம் இருந்து 24 லட்சம் விவரங்களை பெற்றுள்ளது" என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2020ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, இதன் இரண்டாவது பட்டியலையும் ஒப்பந்தத்தின் படி மத்திய அரசிடம் சுவிட்சர்லாந்து பகிர்ந்தது தொடர்பான செய்தியை இந்து தமிழ் வெளியிட்டுள்ளது. இறுதியாக, கருப்பு பணம் பதுக்கி உள்ள இந்தியர்களின் பட்டியலை விக்கி லீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்று 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி விக்கி லீக்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
விக்கி லீக்ஸின் பதிவு
Conclusion:
நம் தேடலின் முடிவாக, விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இந்திய அரசியல் கட்சிகளின் கருப்புப் பணம் குறித்து வெளியிட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. இதனை மறுத்து விக்கி லீக்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.