"காதல் என்கின்ற பெயரில் 'பார்க்கில்' சுற்றிய மாணவிகளை நல்வழிப்படுத்தும் சூப்பர் லேடி போலீஸ்.. தமிழ்நாட்டில் இல்லை.. கேரளாவில்" என்ற கேப்ஷனுடன் பெண் காவலர்கள் பூங்காவில் சுற்றித்திரியும் மாணவிகளை தாக்குவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் புகைப்படத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "இந்தூர் காவல்துறையினர் நகரச் சாலைகளில் குற்றவாளிகளை நடத்தும் நடைமுறை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (NHRC) கோபத்தை வரவழைத்துள்ளது. இந்தச் செயலுக்கு இந்தூர் காவல்துறையால் 'கூண்டே கா ஜூலூஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பல இளம்பெண்கள் மற்றும் ஆண்களை பொது இடங்களில் சித்ரவதை செய்வதன் மூலம் எல்லை மீறி செயல்பட்டுள்ளது இந்தூர் காவல்துறை. இந்தூர் பூங்காவில் இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் ஜோடியாக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த போது பெண் காவலர்கள் சில ஜோடிகளை கடுமையாகத் தாக்கி, கன்னத்தில் அறைந்துள்ளனர். தங்கள் வீடியோ எடுக்கப்படுவது தெரிந்தும் பெண் காவலர்கள் பகிரங்கமாக இச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2016ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி போபால் சமாச்சர் என்ற இந்தி இணைய ஊடகம் வைரலாகும் இந்த புகைப்படங்களுடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தூர் பூங்காவில் இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் அத்துமீறுவதாக பவர்குவான் காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து, நேரில் சென்ற பெண் காவலர்கள் அத்துமீறியவர்களை பிடித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் கண்டித்து அனுப்பி வைத்தனர்.
இந்தூரில் நடந்த சம்பவத்தைப் போன்றே 2011ஆம் ஆண்டு 'ஆப்பரேஷன் மஞ்சு' என்ற பெயரில் பொது இடங்களில் அத்துமீறும் ஜோடிகளை டெல்லி காவல்துறையினர் கண்டித்துள்ளனர். இதனை என்டிடிவி செய்தியாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
'ஆப்பரேஷன் மஞ்சு' தொடர்பான என்டிடிவி செய்தி
Conclusion:
இறுதியாக, நமது தேடலின் வாயிலாக பகிரப்படும் புகைப்படம் கேரளாவில் நடைபெறவில்லை அவை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.