“இப்படியே ஜிகாதிகள் ஹிந்துக்களை கொன்று கேரளாவில் விபத்து போல காட்சியளிக்கிறார்கள்... சிசிடிவி இல்லை என்றால் அதற்கு எதிராக ஆதாரம் கிடைத்திருக்காது... கவனமாக இருங்கள்! எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறி காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் (Archive) வலதுசாரியனரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், தொப்பி அணிந்த நீல நிற சட்டையுடன் இருக்கும் நபர் எதிரே இருக்கும் ஒருவரை ஆயுதத்தால் தாக்குகையில், தாக்குதலுக்கு உள்ளானவர் வாகனத்தின் கீழே மயங்கி விழுகிறார். இதில் தாக்கும் நபர் இஸ்லாமியர் என்றும் இச்சம்பவம் கேரளாவில் நடைபெற்றது என்றும் கூறி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் இலங்கையில் நடைபெற்றது என்பது தெரிய வந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்டு பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Accident Prevention 1st என்ற பேஸ்புக் பக்கத்தில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வைரலாகும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிங்கள மொழியில் இச்சம்பவம் இலங்கையின் கலஹா பகுதியில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள மொழி பேஸ்புக் பதிவு
தொடர்ந்து, இது குறித்து தேடுகையில் ஏற்கனவே வேறொரு கண்ணோட்டத்தில் இதே காணொலி வைரலானது.அது குறித்து, Facts Crescendo தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள Gampola மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட Galaha காவல்நிலைய Acting OIC Rodrigo என்பவரிடம் விளக்கம் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், இது Galaha காவல்நிலைய எல்லைக்குள் நடந்தது. இதன் பின்னணியில், மத ரீதியான காரணம் எதுவும் இல்லை. குறிப்பிட்ட அந்த முஸ்லீம் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் திடீரென அவ்வாறான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை அப்போதே கைது செய்து, காவலில் வைத்திருந்ததாகவும், காயமடைந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Conclusion:
நம் தேடலில் கேரளாவில் இஸ்லாமியர், இந்துவைக் கொலை செய்து விபத்து போல் காட்சிப்படுத்தியுள்ளதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அது உண்மையில் இலங்கையில் நடைபெற்ற சம்பவம் என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.