கேரளாவில் இஸ்லாமியர் தன் குழந்தையுடன் யானைக்கு மாமிசம் கொடுக்கும் பதைபதைப்பான காட்சி என்று கூறி 25 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Asianet News யூடியூப் சேனலில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக, "உணவு கொடுக்கும்போது அப்பாவும் மகனும் யானையால் தாக்கப்பட்டனர்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், "கீழ்பரம்பில் யானைக்கு உணவளித்துக்கொண்டிருந்த தந்தை-மகன் இருவரையும் யானை தாக்கியது. தந்தை நபீல், யானைத் தாக்கும் போது மகனைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
Asianet News வெளியிட்டுள்ள செய்தி
மேலும், இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி Samayam Malayalam வெளியிட்டுள்ள செய்தியில், "கொலக்கடன் நாசர் என்பவரால் வளர்க்கப்பட்ட யானை கொலக்கடன் மினி. இச்சம்பவம் குறித்து நாசர் கூறுகையில், இதற்கு முன்பு பலர் யானைக்கு வாழைப்பழத்தோல் மற்றும் தேங்காய் மட்டைகளை கொடுத்து தொந்தரவு செய்ததாகவும், இதனால் யானை கோபமடைந்து சிறுவனை தாக்கியதாகவும் கூறினார்" என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், நபீல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி விளக்க காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது குடும்ப உறுப்பினர்களுடன் மலப்புரத்தில் உள்ள மினி யானையைப் பார்க்கச் சென்றனர் என்றும் முதலில் நபீல் யானைக்கு தேங்காய் ஊட்டியதாகவும், பின்னர் தனது மகன் யானையின் அருகில் சென்று, அதற்கு உணவளிக்க முயன்ற போது, யானை சிறுவனைப் பிடித்து லேசாகத் தூக்கி எறிந்ததாக தெரிவித்துள்ளார். இதில், தனது மகனின் தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். பலரும் இக்காணொலியை தவறாக பரப்பி வருவதால் இதனை பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொலியின் 2:58 பகுதியில் சிறுவன் கையில் தேங்காய் இருப்பது தெளிவாக தெரிகிறது.
நபீலின் ஃபேஸ்புக் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக யானைக்கு மாமிசம் வழங்கியதாக பகிரப்படும் காணொலியில் உண்மை இல்லை என்றும் உண்மையில், யானைக்கு தேங்காய் தான் வழங்கப்பட்டது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.