Fact Check: பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்தில் அனுமதிக்காத இஸ்லாமியப் பெண்கள்? உண்மை என்ன
பர்தா அணியாக இந்து பெண்களை இஸ்லாமிய பெண்கள் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று கூறி சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
By - Ahamed Ali |
Claim:இந்துப் பெண்களை பேருந்தில் ஏற அனுமதிக்காத இஸ்லாமியப் பெண்கள் குறித்த காணொலி வைரலாகி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் அது கல்லூரி மாணவிகளின் போராட்டம் தொடர்பான காணொலி
ஒரு பேருந்தில் புர்கா அணிந்த சில பெண்களுக்கும் ஒரு வயதான இந்துப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் தகராறின் காணொலி, கேரளாவில் பொதுப் பேருந்துகளில் பர்தா அணியாமல் மற்ற பெண்களைப் பயணிக்க முஸ்லிம் பெண்கள் அனுமதிப்பதில்லை என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact Check:
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள கான்சா மகளிர் கல்லூரி மாணவிகள் சமீபத்தில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் நிற்கவில்லை என்று நடத்திய போராட்டத்தின் போது இந்த காணொலி படமாக்கப்பட்டது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.
வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது மற்றும் காணொலியில் உள்ள நபர்களிடையேயான உரையாடல் முழுமையடையாததால், மலையாளத்தில் கீவர்ட் சர்ச் மேற்கொண்டபோது, மாணவர்களின் போராட்டம் தொடர்பான பல்வேறு ஊடக செய்திகளை தந்தன. அதில், ரிப்போர்ட்டர் டிவியின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வைரல் காணொலி நமக்கு கிடைத்தது.
அதில், ஒரு பேருந்துக்கு முன்னால் மாணவிகள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து ஆய்வு செய்ததில். இரண்டு காணொலிகளும் ஒன்று என்பது தெரிய வந்தது.
இரண்டு காணொலிகளும் ஒரே சம்பவத்தைக் காட்டுகின்றன என்பதை நிரூபிக்கும் பேருந்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் ஒப்பீடு
தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி ரிப்போர்ட்டர் டிவி இதுதொடர்பான செய்தியை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் கும்பலா-முல்லேரியா சாலையில் உள்ள பாஸ்கரா நகரில் அக்டோபர் 22ஆம் தேதி அன்று பேருந்திற்குள் இச்சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு புதிய நிறுத்தங்களை ஆர்டிஓ சமீபத்தில் அனுமதித்துள்ளது, ஆனால் வீடியோவில் உள்ள பேருந்து புதிதாக அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நிற்கவில்லை, இது மாணவர்கள் தங்கள் கல்லூரியை அடைய அதிக நேரம் நடக்க வேண்டியிருப்பதால் அவர்களை கோபப்படுத்தியது.
மேலும் தெளிவுபடுத்த, கும்பலா காவல் நிலைய காவல் நிலைய அதிகாரியை நியூஸ் மீட்டரின் மலையாளப் பிரிவு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதற்கு, அவர் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று எந்த வகுப்புவாதக் கோணமும் அதி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். “இந்த காணொலியை நான் பார்த்தேன். சமீபத்தில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காதது தொடர்பான ஒரே பிரச்சினை மட்டுமே உள்ளது. பேருந்தின் உள்ளே இருந்த மாணவர்கள், போராட்டத்தால் ஏற்பட்ட தாமதத்தால் எரிச்சலடைந்ததால், வீடியோவில் உள்ள மூதாட்டியுடன் அதே பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறார்கள். இதில் வகுப்புவாத அல்லது மதக் கோணங்கள் எதுவும் இல்லை. இதுவரை யாரிடமிருந்தும் இதுபோன்ற புகார்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை” என்றனர் காவல்துறையினர்.
காவல்துறையின் கூற்றை ஆதரித்த கான்சா மகளிர் கல்லூரி இயக்குனர் பி.எம். அஷ்ரப்பையும் தொடர்பு கொண்டு பேசியது நியூஸ் மீட்டர் மலையாளம். "எங்கள் மாணவர்கள் நீண்ட காலமாக கல்லூரிக்கு முன்னால் பேருந்து நிறுத்தம் கோரி வருகின்றனர். ஆர்டிஓ அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது, சமீபத்தில் ஒரு புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. அதன் பிறகும், தனியார் பேருந்துகள் தொடர்ந்து அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றன, மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் காரணமாக பேருந்து தாமதமானதால், வேறு சில பயணிகள் எரிச்சலடைந்தனர், அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் எந்த வகுப்புவாத கோணங்களும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
Conclusion:
முடிவாக, பர்தா அணியாத பிற மதப் பயணிகளை இஸ்லாமிய பெண்கள் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று வைரலாகும் காணொளி தவறானது. உண்மையில் மகளிர் கல்லூரி மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் நிற்கவில்லை என்று நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொலி.