"ஹெலிகாப்டரை வணங்குகிறார்கள், காலில் விழுகிறார்கள் என சொன்ன சிதம்பரம்" என்ற கேப்ஷனுடன் ஒரு நபர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் இருப்பது முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக முதலில் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இதே புகைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டும் சமூக வலைதளங்களில் வைரலானது தெரியவந்தது. தமிழ்நாடு பாலிடிக்ஸ் என்ற பிளாக்ஸ்பாட் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி "ஜெயலலிதா காலில் விழுந்த தமிழக அமைச்சர்கள்" என்ற தலைப்பில் புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
பிளாக்ஸ்பாட்டில் பதிவாகியுள்ள புகைப்படம்
அதில், தற்போது வைரலாகக் கூடிய புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், அப்புகைப்படத்தில் "தமிழ்நாடு அமைச்சர் தம்பிதுரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2001 முதல் 2005 வரையிலான அதிமுக ஆட்சியின் போது தம்பிதுரை கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
இதேபோன்று, அமைச்சர்கள் வளர்மதி, வைத்தியலிங்கம், வேலுச்சாமி, தளவாய் சுந்தரம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரது புகைப்படங்களும் அப்பதிவில் இடம் பெற்றுள்ளன.
Conclusion:
நமது தேடலில் முடிவாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது ப. சிதம்பரம் இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், புகைப்படத்தில் இருப்பது அமைச்சர் தம்பிதுரை என்பதும் தெரியவந்துள்ளது.