“இந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியிடமிருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசாக கிடைக்கிறது! இப்போதே உங்களுடையதைக் கோருங்கள்!” என்ற தகவலும் இணைய லிங்க் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ரூபாய் 699 பரிசுத்தொகையை பெறுங்கள் என்ற தகவலுடன் காணொலி இடம்பெற்றுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இது ஸ்பேம் என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவலுடன் கூடிய லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, “சுதந்திர தினத்தன்று மோடி ஜியிடம் இருந்து உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்துள்ளது, இப்போது ஸ்க்ராச் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் ₹5000 வரை ரொக்கம் பெற்றிடுங்கள்” என்ற தகவலுடன் சந்தேகத்திற்கிடமான இணையதளம் (Archive) ஒன்று தோன்றியது. அதில், SCRATCH HERE என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ஸ்க்ராட்ச் செய்தால் நமக்கான பரிசுத்தொகை என்று குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட தொகை ஒன்று தோன்றுகிறது.
தொடர்ந்து, “இப்போது இந்த பொத்தானை தட்டுங்கள் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கவும்” என்ற கீழே உள்ள பகுதியை கிளிக் செய்தால் அடுத்ததாக பேடிஎம் அல்லது போன்பே போன்ற UPI பணப்பரிமாற்ற செயலிகள் உதவியுடன் நமக்கு கிடைக்கப்பெற்ற பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடுகிறது.
அதனை கிளிக் செய்து பார்த்தால் நாம் பிறருக்கு பணம் அனுப்பக்கூடிய பகுதி தோன்றுகிறது. இதனை அறியாமல் நமது UPI PINஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பினால் ஸ்கேமர்களின் வங்கிக் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையுடைய நமது பணம் சென்றுவிடும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த பரிசுத்தொகையும் பெற இயலாது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசுத்தொகை வழங்கப்படுவதாக இதே போன்ற ஒரு ஸ்பேம் லிங்க் வைரலானது குறித்து நியூஸ் மீட்டர் கட்டுரை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ. 699 வரை பிரதமர் மோடி பரிசுத்தொகை வழங்க உள்ளதாக இணைய லிங்குடன் வைரலாகும் தகவல் ஒரு ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், இந்த ஸ்பேம் லிங்கை கிளிக் செய்து யாரும் ஏமாற வேண்டாம்.