"ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற Pappu மைக்கா ஆன் பண்ணாமலும் பேசமுடியும்" என்ற கேப்ஷனுடன் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேடையில் மைக்கை ஆன் செய்யாமல் பேசியதாக 30 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட பலரும் இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இந்நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசிய முழு நீள காணொலி ஒன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொலியின் ஐந்து நிமிடத்திற்கு மேல் தற்போது வைரலாகும் 30 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி இருப்பதை நம்மால் காண முடிகிறது.
அதில், "பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது பாராளுமன்றத்தில் எனது மைக் ஆஃப் செய்யப்படுகிறது" என்று பாராளுமன்றத்தில் நடைபெற்றதை சுட்டிக்காட்டி பேசிய ராகுல்காந்தி மைக்கை ஆஃப் செய்து அதனை செய்தும் காட்டினார். தொடர்ந்து இது குறித்து கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த நவம்பர் 11-ம் தேதி என்டிடிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில், "இங்கு மைக்கின் கட்டுப்பாடு என்னிடம் உள்ளது. ஆனால், பாராளுமன்றத்தில் இல்லை" மைக்கை ஆஃப் செய்து டெமோ காட்டிய ராகுல் காந்தி (Rahul Gandhi's "Mic Off" Demo Dig, "Here I Have Controls, But In Parliament…") என்ற தலைப்பில் மராட்டியத்தில் நடந்த பாராத் ஜோடோ யாத்திரையின் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இதே காணொலியை டைம்ஸ்நவ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் தங்களது யூடியூப் சேனலில் ஷார்ட்ஸாக வெளியிட்டுள்ளன. இதன் மூலம் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தி மைக்கை ஆஃப் செய்து பல இடங்களில் பேசியது உறுதியாகிறது.
Conclusion:
இறுதியாக நமது தேடலின் மூலம், ராகுல் காந்தி மைக்கை ஆன் செய்யாமல் பேசியதாக வலதுசாரியினர் பரப்பும் காணொலி உண்மையல்ல. பாராளுமன்றத்தில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி குறித்துப் பேசினால் மைக்கை ஆஃப் செய்து விடுகிறார்கள் என அவர் செய்து காட்டியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் திரித்து பரப்பி வருகின்றனர்.