Fact Check: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக வைரலாகும் ராணுவ தாக்குதல் தொடர்பான காணொலிகள்? உண்மை அறிக

‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிகளின் உண்மை தன்மையை ஆராய்ந்துள்ளது இக்கட்டுரை

By Ahamed Ali
Published on : 9 May 2025 7:32 PM IST

Fact Check: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக வைரலாகும் ராணுவ தாக்குதல் தொடர்பான காணொலிகள்? உண்மை அறிக
Claim:இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வைரலாகும் காணொலிகள்
Fact:இவை உண்மையற்றறவை. வைரலாகும் காணொலிக்கும் ஆபரேஷன் சிந்தூருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் என்று கூறப்படும் 9 இடங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை நடத்தியது இந்தியா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் எல்லோரும் மாநிலங்களில் பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணைகளால் தாக்கியது. இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றிகரமாக இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் நிலை என்றும் பாகிஸ்தான் ஏவுகணைகளையும் போர் விமானங்களையும் இந்திய ராணுவத்தின் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்துவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன.


வைரலாகும் பதிவுகள்

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலிகள் அனைத்தும் தவறானது என்றும் வெவ்வேறு நிகழ்வுகளில் தொடர்புடையது என்றும் சிலவை வீடியோ கேம் காட்சிகள் என்றும் தெரியவந்தன.

பதிவு 1:

‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ பிறகு பாகிஸ்தானின் நிலை என்று வைரலாகும் காணொலி (Archive) குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, கடந்த ஜனவரி 24ஆம் தேதி Azim Official என்ற யூடியூப் சேனலில் “போர் நிறுத்தத்திற்கு முன்பாக பாலஸ்தீனத்தின் காஸா” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, வைரலாகும் காணொலியில் உள்ள dn_osama என்ற எழுத்தை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, OSAMA A RABEA என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அதில் அவர் தன்னை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை ஜபாலியா முகாம் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வைரலாகும் காணொலி காஸா போரின்போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காஸா போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஜபாலியா முகாம் இடிந்த நிலையில் இருப்பதை ட்ரோன் காட்சிகள் காட்டுகிறது என்று Reuters ஊடகம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதே காணொலி மியான்மர் நிலநடுக்கம் என்று கூறி பகிரப்பட்டது. அதனையும் நியூஸ் மீட்டர் பேக்ட்செக் செய்துள்ளது.

பதிவு 2:

காஷ்மீரின் பாம்போர் அருகே நேற்று (மே 8) இரவு இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் என்று வைரலாகும் காணொலியின் (Archive) குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Coffin Gaming என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதில், “S-401 Air Defense Targeted FPV Drone! Ep 115” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்த ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்கையில், அப்பக்கம் தன்னை ஒரு “கேமிங் வீடியோ கிரியேட்டர்” என்று குறிப்பிட்டுள்ளது. இவற்றின் மூலம் வைரலாகும் காணொலி வீடியோ கேமில் இடம்பெற்றுள்ள காட்சி என்று தெரியவருகிறது.

பதிவு 3:

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பகிரப்படும் காணொலி (Archive) குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதனை ஆய்வு செய்தோம். அப்போது, இடதுபுறத்தின் மேல் பகுதி மூலையில் லோகோ இடம்பெற்றிருந்தது. அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, GTA 5 என்ற வீடியோ கேமின் லோகோ என்பது தெரியவந்தது. இதன்மூலம் முதற்கட்டமாக வைரலாகும் காணொலி வீடியோ கேமில் இடம்பெற்றிருக்கலாம் என்று அறிய முடிகிறது.


காணொலியில் இடம்பெற்றுள்ள GTA 5 லோகோ

தொடர்ந்து, காணொலி குறித்து தேடியபோது, TBG Plays என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “fighter jets faces air-defense-system quickly attack blasttic missile gta 5” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள அதே வகை ராணுவ ஏவுகணை வாகணத்தை மற்றொரு ராணுவ வாகனத்துடன் ஒப்பிட்டு Onespot Gaming என்ற யூடியூப் சேனலில் “GTA 5 கேமில் இடம்பெற்றுள்ள இரு ராணுவ வாகனத்தின் ஒப்பீடு” என்ற தலைப்பில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி வீடியோ கேமில் வரும் காட்சி என்று தெரியவருகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலிகள் வெவ்வேறு நிகழ்வுகளுடன்தொடர்புடையது என்றும் சிலவை வீடியோ கேம் காட்சிகள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:இந்தியா பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் தொடர்பாக வைரலாகி வரும் காணொலிகள்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Threads, X
Claim Fact Check:False
Fact:இவை உண்மையற்றறவை. வைரலாகும் காணொலிக்கும் ஆபரேஷன் சிந்தூருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
Next Story