2024ஆம் ஆண்டு தமிழகம் எதிர்கொண்ட மிகப்பெரும் பொய் பிரச்சாரதின் பின்னணி என்ன?
கடந்த 2023ஆம் ஆண்டு வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதாக மிகப்பெரும் பொய் பிரச்சாரத்தினை பாஜகவினர் மேற்கொண்டதன் விளைவாக வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்லக்கூடிய நிலை உருவானது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டு தமிழகம் எதிர்கொண்ட மிகப்பெரும் பொய் பிரச்சாரத்தினை இக்கட்டுரை விரிவாக எடுத்துக்காட்டுகிறது
By Ahamed Ali
ஒவ்வொரு ஆண்டும் பொய் செய்திகளின் பரவல் என்பது அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. அதிலும் குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும்பாலான தேசிய கட்சிகள் பொய் செய்திகளை பிரச்சார ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பாஜக கோடிகளை இறைத்து சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளை விளம்பரங்களாகவும் மீன் முறையிலும் வெளியிடுகிறது. இதற்கென பிரத்தியேகமாக சமூக வலைதள பக்கங்களையும், கணக்குகளையும் துவங்கி அதில் போலிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
Statista எனப்படும் தரவுகளை ஆய்வு செய்யக்கூடிய ஜெர்மானிய இணையதளம், “பொய் செய்திகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இடங்கள்” என்ற ஆய்வு தகவலை கடந்த ஜனவரி 19ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்தியா பொய் செய்திகள் பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்:
இச்சூழலில் தான் இந்தியா 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஜனவரி 22ஆம் தேதி அவசர கதியில் நடத்தியது ஒன்றிய பாஜக அரசு.
அச்சமயம், தமிழகத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடுகளைச் செய்தனர். இந்நிலையில், அவர்களால் நடத்தப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் ஆளும் அரசு ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை ஒளிபரப்ப அனுமதிக்காமல் இந்து விரோத நோக்கத்தோடு செயல்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கும்பாபிஷேக ஒளிபரப்பை தடுத்ததாக கூறி பொய் தகவல்களை பரப்பினர். அவ்வாறான எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
தொடர்ச்சியாக, கும்பாபிஷேகத்தன்று மாநிலத்தில் சிறப்பு பூஜைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரபல தமிழ் நாளிதழ் ‘தினமலர்’ பொய் செய்தி வெளியிட்டு இருந்தது. வெளியான செய்திக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜனவரி 21ஆம் தேதி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அதில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் பொய் என்று விளக்கினார்.
மேலும், இதுபோன்ற தவறான தகவலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் பரப்பினார். அவர், ஜனவரி 22ஆம் தேதி அன்று மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோவிலுக்குச் சென்றதாகவும், "பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குத் தெரியாத பயம் மற்றும் பயம் போன்ற உணர்வுகள் எங்கும் பரவி இருப்பதை" உணர்ந்ததாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது, "நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பண்டிகை சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டது. ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டாவை நாடு முழுவதும் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், இங்குள்ள (தமிழ்நாடு) கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, சிறிது நேரத்தில் கோதண்டராமஸ்வாமி கோவில் அர்ச்சகர்கள் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஆளுநரின் இந்த கருத்தை முறியடிப்பது போல, தங்களுக்கு எந்த பயமும் இல்லை, பய உணர்வும் இல்லை என்று கூறினர்.
குழந்தைகளைக் கடத்தும் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல்:
இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடர்ச்சியாக வடமாநில கும்பல் ஒன்று தமிழ்நாட்டில் குழந்தைகளை கடத்துவதாகவும் அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்வதாகவும் கூறி பல்வேறு பொய் செய்திகள் பரவி வந்தன. இதன் காரணமாக சென்னை, திண்டுக்கல், உட்பட பல இடங்களில் வடமாநில இளைஞர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து அவர்களைப் பிடித்து பொதுமக்கள் அடிக்கும் சம்பவங்களும் நடைபெற்றன.
குறிப்பாக, சென்னை அருகே பம்மலில் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு திருநங்கையை வடமாநிலத்தவர் என்று தவறாகச் சந்தேகித்து மக்கள் தாக்கினர். இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில், திருவொற்றியூர் பகுதியில் தூய்மைப் பணி செய்து வந்த பிகாரைச் சேர்ந்த வட மாநில இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தாக்கினர்.
அதேபோல் சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதன்பிறகு, காவல்துறையினர் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் காணொலி உண்மையானதல்ல யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் செய்தியறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிரச்சினை சற்று தணிந்தது.
குழந்தைகளை கடத்தும் வடஇந்தியர்கள்
தமிழ்நாடு அரசு ஃபேக்ட்செக் யூனிட்:
மாநிலத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் பொய் செய்திகளை சமாலிக்கும் மிகப்பெரிய சவாலை உணர்ந்த அரசாங்கம் 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கென்று பிரத்தியேக உண்மைச் சரிபார்ப்பு பிரிவை உருவாக்கியது. இதன்மூலம் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களுக்கு, குறிப்பாக முக்கியமான சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில், அரசு இயந்திரம் சரியான நேரத்தில் பதிலளிக்க முடியும் என்பதை இப்பிரிவு உறுதிப்படுத்தியது.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் இப்பிரிவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இது அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான மற்றும் போலிச் செய்திகளை கண்டறியும் என இதுகுறித்து வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைப்பது அரசுக்கு எதிரான விமர்சனங்களையும், மக்களின் கருத்து சுதந்திரம், எழுத்துரிமை ஆகியவற்றையும் ஒடுக்கும் நடவடிக்கை என சில பத்திரிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டின. இந்நிலையில், அதிமுக ஐடி விங் பொறுப்பாளர் ஆர். நிர்மல் குமார் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசு துவங்கியுள்ள ஃபேக்ட்செக் யூனிட் பேச்சு சுதந்திரத்தையும் எதிர்க்கட்சிகளின் குரலையும் கட்டுப்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசு துவக்கவுள்ள ஃபேக்ட்செக் யூனிட் தொடர்பான வழக்கு பாம்பே உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அதற்கு தீர்ப்பு வழங்கம் வரை இந்த வழக்கிற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தது.
இச்சூழலில், ஒன்றிய அரசின் ஃபேக்ட்செக் யூனிட் நடைமுறை அரசியலமைப்பிற்கு எதிரானது அன்று பாம்பே உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இருப்பினும், இந்த தீர்ப்பால் தாங்கள் பாதிக்கப்படவில்லை என தமிழக அரசின் ஃபேக்ட்செக் யூனிட் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஃபேக்ட்செக் யூனிட் ஆனது அரசுக்கு எதிராக பரப்பப்படும் பொய் செய்திகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை குறிவைத்த பொய் செய்திகள்:
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் துவக்கி வைத்தார். தொடர்ச்சியாக, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை அறிவித்து உரையாற்றினார். ஒருபுறம் மாநாடு நடைபெற மற்றொரு புறம் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தவெக குறித்து பொய் செய்திகள் எதிர்கட்சியினரால் பகிரப்பட்டன. நடிகர் விஜய்க்கு வாக்களிக்க மாட்டேன் என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியதாக தவறான காணொலி பகிரப்பட்டது.
தவெக-வை வைத்து பகிரப்பட்ட பொய் செய்திகள்
மேலும், தமிழக வெற்றி கழகம் பாஜக உடன் கூட்டணி வைக்கப்போவதாக தவறான தகவல் வைரலானது. அதேபோன்று லண்டனில் அண்ணாமலையை ரகசியமாக சந்தித்த விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டது. இதுமட்டுமின்றி அரசியல் புரிதல் இன்றி பேசிய தவெக நிர்வாகிகள், மது அருந்திவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்று எடிட் செய்யப்பட்ட காணொலி பகிரப்பட்டது. மேலும், கால்பந்து வீரர் ரொனால்டோ தவெக மாநாட்டிற்கு வருகை தர உள்ளதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டும் வைரலானது.
இவ்வாறாக நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி பல்வேறு பொய் செய்திகள் இந்த ஆண்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.