2023ஆம் ஆண்டில் நியூஸ்மீட்டர் முறியடித்த பொய் செய்திகள்!

இந்த ஆண்டில் பகிரப்பட்ட பொய் செய்திகளை நியூஸ்மீட்டர் முறியடித்துள்ளது. மக்களிடத்தில் பரவிய சில முக்கிய பொய் செய்திகள் உங்கள் பார்வைக்கு

By Ahamed Ali  Published on  30 Dec 2023 4:30 AM GMT
2023ஆம் ஆண்டில் நியூஸ்மீட்டர் முறியடித்த பொய் செய்திகள்!

நியூஸ்மீட்டர் முறியடித்த பொய் செய்திகள்!

பொய் செய்திகளின் பரவல் என்பது ஆண்டுதோறும் நோய்தொற்றைப் போன்று அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. சிலர் அதனை பொய் செய்தி என்று தெரியாமல் பரப்பி வருகின்றனர். சிலரோ, குறிப்பாக அரசியல் கட்சிகள்… தவறான நோக்கத்திற்காகவே பொய் செய்திகளை வேண்டுமென்றே பரப்பி வருகின்றன. இந்த ஆண்டும் உள்ளூர் நிகழ்வுகளில் தொடங்கி, தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் அதிகமான பொய் செய்திகள் பகிரப்பட்டன. அவ்வாறாக பகிரப்பப்பட்ட பல்வேறு பொய் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து “ஃபேக்ட்செக்” செய்துள்ளது நியூஸ்மீட்டர். இந்த ஆண்டு(2023) அவ்வாறாக பகிரப்பட்டு மிகவும் வைரலான பொய் செய்திகளின் தொகுப்புகளை இங்கே காணலாம்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்குதல்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்களது மாநிலங்களுக்கே துரத்தப்படுவதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் வேண்டுமென்றே பாஜகவினர் பொய் செய்திகளை பரப்பி வந்தனர். இச்சூழலில், "இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காமல் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடும் சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது," என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடும் அளவிற்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான பொய் செய்திகளை ஃபேக்ட்செக் செய்து கட்டுரைகளாக வெளியிட்டிருந்தோம், அவற்றை கீழே காணலாம்.

1.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா? வைரல் காணொலிகளின் உண்மைப் பின்னணி?

2.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா: மீண்டும் பரவும் வதந்திகள்!

3.

வட மாநிலங்களில் இருந்து குழந்தைகளைக் கடத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு 200 பேர் வந்துள்ளதாக பரவும் ஆடியோ? உண்மை என்ன?

சென்னை மற்றும் தென் தமிழ்நாடு வெள்ளம் 2023

சென்னையில் நவம்பர் மாதம் முதலே பெய்ய துவங்கிய மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது சென்னை மாநகரம். தொடர்ந்து, மிக்ஜாம் புயலும் வெள்ளப்பெருக்கை அதிகரித்தது. இச்சூழலில், தெர்மோகோலுடன் வெள்ளநீரில் மிதக்கும் நபர் என்று குஜராத்தில் நடைபெற்ற சம்பவத்தை தவறாக பரப்பி வந்தனர். மேலும், ரயில் நிலையத்தினுள் இயக்கப்படும் படகு, குடியிருப்புக்குள் புகுந்த முதலை, மண் அள்ளும் இயந்திரம் கொண்டு வெள்ளநீர் அகற்றப்படுவதாக வைரலான காணொலி என்று பல்வேறு பொய் செய்திகள் வைரலானது. தொடர்ச்சியாக தென் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளம் என்று மொராக்கோவில் ஏற்பட்ட வெள்ளக்காணொலியை பரப்பி வந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குள்ளாகவே ரயில் விபத்துடன் இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தி பல்வேறு பொய் தகவல்கள் பரவத் துவங்கியது. விபத்துப் பகுதிக்கு அருகில் மசூதி இருப்பதாகவும், விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்த பாகாநாகா பஜார் ரயில் நிலையத்தில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் முஹம்மது ஷெரீஃப் என்ற இஸ்லாமியர் என்றும் பொய்கள் பரப்பப்பட்டன. மேலும், பிடிபட்ட ஸ்டேஷன் மாஸ்டரை சிபிஐ காவல்துறையினர் சித்திரவதை செய்வதாகவும் கூறி பழைய காணொலி வைரலானது.

மணிப்பூர் கலவரம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பால் பகுதியில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும் மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் வன்முறை வெடித்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதில், மணிப்பூர் கலவரத்திற்காக நீதி கேட்டுப் போராடிய சிறுமி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்படுவதாக மியான்மாரில் எடுக்கப்பட்ட பழைய காணொலி வைரலானது. அதேபோன்று, கிறிஸ்தவப் பெண் ஒருவர் ஆடையின்றி துணை ராணுவப் படையினரை விரட்டுவதாக உத்தரப்பிரதேசத்தில் ஆடையின்றி போராடிய திருநங்கையின் காணொலியை தவறாக பரப்பினர்.

சந்திரயான் 3

நிலவின் தென்துருவத்தில் இறங்கி முதல் நாடென தடம் பதித்தது இந்தியா. சந்திரயான் 3ன் வெற்றியை நாடே கொண்டாடிக் கொண்டிருக்க சந்திரயான் 3 தொடர்பாக பல்வேறு பொய் செய்திகளும் பகிரப்பட்டன. சந்திரயான் 3 விண்கலம் லாரியில் ஏற்றி வரப்பட்டதாக கம்யூட்டர் வீடியோ கேமின் ஒரு காட்சி வைரலானது. மேலும், சந்திரயான் 3 எடுத்த முதல் காணொலி என்று செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாசாவின் ரோவர்கள் எடுத்த புகைப்படங்கள் தவறாக பகிரப்பட்டன.

துருக்கி நிலநடுக்கம்

பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இச்சூழலில், 2018ஆம் ஆண்டு சிரியா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பழைய புகைப்படங்களை 2023 நிலநடுக்கத்துடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். மேலும், நிலநடுக்கத்தின் போது பசியால் அழுவதைக் கண்ட சகோதரி குழந்தைக்கு பால் கொடுக்க முயல்கிறார் என்று 2022ஆம் ஆண்டு பகிரப்பட்ட பழைய காணொலியை பகிர்ந்து வந்தனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது எதிர்பாராத விதமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதனைத் தொடர்ந்து தற்போது வரை போர் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், போரின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்கள், உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் என்று பல்வேறு விதமான பொய் செய்திகள் தற்போது வரை வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கங்களும், இஸ்ரேல் ஆதரவு எக்ஸ் பயனர்களும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன குழந்தையின் உடலை… அது உடல் அல்ல பொம்மை என்று பொய்யாக வெளியிட்ட தகவல்களை ஆல்ட் நியூஸ் ஃபேக்ட்செக் செய்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பாக நியூஸ்மீட்டர் ஃபேக்ட்செக் செய்த கட்டுரைகளை கீழே காணலாம்.

1.

இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் தொடர்பாக வைரலாகும் காணொலிகள்: உண்மை என்ன?

2.

பாலஸ்தீன போராளிக் குழுக்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றினரா?

3.

பாலஸ்தீனத்துடன் துணை நின்றாரா கால்பந்து வீரர் ரொனால்டோ?

4.

தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பாலஸ்தீன குழந்தைகளை தாக்கியதா இஸ்ரேலிய ராணுவம்?

5.

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தாரா?

6.

கால்பந்து மைதானத்தில் வீசப்பட்ட பொம்மைகள்: பாலஸ்த்தீன் குழந்தைகளுக்காக வீசப்பட்டதா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - 2023

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற்றது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக அமைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி தோல்வியடைந்தது இந்திய அணி. இதில், இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி, கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாகவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ரோஹித் சர்மா தவறான கருத்தை முன்வைத்தார் என்றும், ரசிகர்கள், டேவிட் வார்னரிடம் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்டதாகவும் பொய் செய்திகள் வைரலானது.

செயற்கை நுண்ணறிவு (AI)

இந்த ஆண்டில் ஃபேக்ட்செக் யூனிட்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது Deep Fake மற்றும் AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொலிகள். போப் ஆண்டவர் துவங்கி பிரதமர்கள், ஜனாதிபதிகள், சினிமா நட்சத்திரங்கள், உலகப் பணக்காரர்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த AI தொழில்நுட்பம். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பதால் இதனைக் கொண்டு உருவாக்கி பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை ஆய்வு செய்வது கடினமாகவே உள்ளது.

Next Story